ஒரு பாடல் மட்டும் பாட வந்த டி.எம்.எஸ்.. எப்படி இந்த சினிமாவிற்கே சொந்தமானார் தெரியுமா?

By :  Rohini
Update:2025-02-24 16:05 IST

எப்படி சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி ஒரு தவிர்க்க முடியாத வார்த்தையோ அதைப் போல டி எம் எஸ் என்ற வார்த்தையும் ஒரு தவிர்க்க முடியாத வார்த்தை தான். அந்தக் காலத்தில் டி எம் எஸ் இல்லாமல் எம்ஜிஆர் நிறைவு பெற மாட்டார். சிவாஜி நிறைவு பெற மாட்டார். ஏன் தமிழ் சினிமாவே நிறைவு பெற்றிருக்காது.

அந்த அளவுக்கு தனது பாடல்கள் மூலம் தமிழின் முக்கியத்துவத்தையும் தமிழின் உச்சரிப்பையும் டி எம் எஸ் நெசவு செய்துவிட்டு சென்றிருக்கிறார்.இந்த நிலையில் பிரபல புலவர் ஆலங்குடி வெள்ளைச்சாமி, டிஎம்எஸை பற்றி பல்வேறு செய்திகளை பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் டிரெண்ட்செட்டர் டிஎம்எஸ் என ஆலங்குடி வெள்ளைச்சாமி கூறி இருக்கிறார்.

ஏனெனில் டிஎம்எஸ்ஸுக்கு முன்னாடி இருந்த பாடகர்கள் அவர்களே சொந்தமாக பாடியிருக்கிறார்கள். அதன் பிறகு திருச்சி லோகநாதன் பின்னணி பாடகர் என்ற முறையில் அனைவருக்கும் பாடி கொண்டிருந்தார். அதன் பிறகு தான் இந்த நடிகருக்கு பாடினால் யார் பாடுவார் என்ற ஒரு தேடலை அனைவரும் மத்தியில் ஏற்படுத்தியவர் டி எம் எஸ். இன்னும் சொல்லப் போனால் துல்லியமாக தமிழை உச்சரித்ததில் டிஎம்எஸ் பங்கு முக்கியமானது

சிவாஜி படங்களை பார்த்து எப்படி தமிழ் கற்றுக்கொள்ள முடியுமோ அதைப்போல டி எம் எஸ் பாடலை கேட்டும் தமிழை கற்றுக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு அழகான தமிழ் குரலை கொண்டவர் டி எம் எஸ். சினிமாவைப் பொறுத்த வரைக்கும் யாரையும் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளாது. இசை குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் பாகவதர் பாடலை கேட்டு தான் இவர் பாடகராக மாறினார்.

ஏறத்தாழ 30 ஆண்டுகள் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் டி எம் எஸ். இதற்கு முக்கியமான காரணம் என்ன எனில் உச்சத்தில் இருந்த இரண்டு கலைஞர்களுக்கு இவர்தான் பாடியிருக்கிறார். இது யாருக்குமே நடக்கவில்லை. ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் இரண்டு பேருமே டி எம் எஸ் ஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கு சீர்காழி கோவிந்தன் தான் பாடி வந்தார்.சிவாஜிக்கு திருச்சி லோகநாதன் பாடி வந்தார்.

அதன் பிறகு பெரிய போராட்டத்திற்கு அப்புறம்தான் டி எம் எஸ் உள்ளே வருகிறார். முதன்முதலில் சிவாஜிக்காக தூக்குத் தூக்கி என்ற படத்தில் டி எம் எஸ் பாட வருகிறார். ஆனால் சிவாஜி வேண்டாம் என சொல்கிறார். ஆனால் சிவாஜியின் மனதை மாற்றுகிறார் மருதகாசி. தூக்கு தூக்கி படத்தில் பாடல் எழுதியவர் மருதகாசி. அவர்தான் ஒரு பாடலை மட்டும் டி எம் எஸ் வைத்து பாட சொல்லுங்களேன் என கூறுகிறார்.

அதனால் ஒரு பாடலை டிஎம்எஸ் பாட அது சிவாஜிக்கு பிடித்துப் போய்விட்டது. உடனே சிவாஜி அப்போ இந்த படத்தில் எல்லா பாடலையும் நீங்களே பாடி விடுங்கள் என கூறினாராம். அதன் பிறகு தூக்குத்தூக்கி படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் பயங்கர ஹிட். இந்த படத்திற்கு பிறகு தான் சிவாஜி இனிமேல் நமக்கு இவர் தான் கரெக்ட் என நினைக்கிறார். இதிலிருந்து தொடர்ந்து சிவாஜியின் படங்களுக்கு டி எம் எஸ் பாட ஆரம்பிக்கிறார். இதைப்போல மலைக்கள்ளன் திரைப்படத்தின் மூலமாகத்தான் எம்ஜிஆருக்கும் முதன்முதலாக பாட வந்தார் டி எம் எஸ் .

Tags:    

Similar News