அறிவிப்போடு நின்று போன எம்ஜிஆர், சிவாஜி, கமல் படங்கள்... நமக்குக் கொடுத்து வச்சது அவ்ளோ தான்...!

ரசிகர்களுக்கு அவ்வப்போது உற்சாகம் ஊட்டுவதற்காக சில படங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அது வராமல் அறிவிப்போடு நின்று விடுகின்றன. 'பாவம்... ரசிகன்' என்று தான் சொல்ல வேண்டும்.

;

Published On 2024-08-07 18:30 IST   |   Updated On 2024-08-07 18:30:00 IST

தமிழ்சினிமாவிலே அறிவிப்போடு நின்ற படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் 1000 படங்களுக்கு மேல் தேறும் என்று நான் நினைக்கிறேன்.

நாடோடி மன்னன் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு எம்ஜிஆரின் இயக்கத்திலும் நடிப்பிலும் பல படங்கள் உருவாகப் போவதாக அறிவிப்புகள் வந்தன. அதுல 85 சதவீத படங்கள் உருவாகவே இல்லை. அதே மாதிரி அறிவிப்போடு நின்று போன இன்னொரு படம் தான் உலகநாயகன் கமலின் இயக்கத்தில் உருவாக இருந்த மருதநாயகம்.

அந்தப் படத்தைப் போல இன்னொரு படத்தையும் அறிவிப்போடு நிறுத்தினார் கமல். அதுதான் மர்மயோகி. தமிழில் அம்பிகாபதி படம் முதலில் உருவானபோது அதில் நடித்தவர் எம்.கே.தியாகராஜபாகவதர்.

அது மீண்டும் உருவானபோது அதில் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி. அந்தப் படத்தில் சிவாஜியின் தந்தை கம்பராக எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்தால் நல்லாருக்கும் என்ற யோசனை அந்தப் படத்தின் இயக்குனர் ஏ.எல்.சீனிவாசனுக்கு வந்தது.

அதற்காக எம்.கே.தியாகராஜபாகவதரை அணுகி சிவாஜிக்கு என்ன சம்பளமோ அதை விட கூடுதலாகத் தருகிறோம். சிவாஜிக்குத் தந்தையாக நடிங்கன்னு இயக்குனர் கேட்டுக்கொண்டார். அதற்கு பாகவதர், சிவாஜிக்குத் தந்தையாக நடிப்பதில் மகிழ்ச்சி. ஆனால் நான் ஏற்கனவே அம்பிகாபதியாக நடித்தவன். அதனால் சிவாஜிக்குத் தந்தையாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் எம்.கே.தியாகராஜ பாகவதரும், சிவாஜியும் இணைந்து பால்ய சக்கரம் என்ற படத்தில் நடிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. பாகவதருக்கு ஜோடியாக வசுந்தராதேவியும், சிவாஜிக்கு ஜோடியாக எம்.என்.ராஜமும் நடிப்பார் என்று அந்த விளம்பரம் சொன்னது.

அந்த அறிவிப்பைப் பார்த்ததும் சிவாஜி ரசிகர்கள் பரவசமானார்கள். ஆனால் அது அறிவிப்போடு நின்று போனது. அந்த நேரத்தில் சிவாஜி பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால் தான் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என்ற செய்தி பின்னாளில் வந்தது.

அது மட்டும் திட்டமிட்டபடி வெளியாகி இருக்குமானால் நிச்சயமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும். வித்தியாசமான படமாகவும் வந்து இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Similar News