இன்றைய ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்த அன்றைய படம் இதுதான்..!

சினிமாஸ்கோப்பிற்கு வித்திட்ட ஊமைவிழிகள்

;

By :  adminram
Published On 2021-08-16 01:37 IST   |   Updated On 2021-08-16 01:37:00 IST

33 ஆண்டு காலம் கடந்தும் இன்று வரை ஒரு படம் பேசப்படுகிறது என்றால் அது ஆச்சரியமான விஷயம் தான். அதற்கு காரணம் அந்தப்படத்தின் டெக்னீஷியன்கள் மற்றும் இயக்குனர் தான். 1986ல் வெளியான இப்படத்தை ஆபாவாணன் தயாரிக்க அரவிந்தராஜ் இயக்கினார். விஜயகாந்த், ஜெய்சங்கர், கார்த்திக், அருண்பாண்டியன், ரவிச்சந்திரன், சந்திரசேகர், சரிதா, மலேசியாவாசுதேவன், இளவரசி, தேங்காய் சீனிவாசன், சசிகலா, டிஸ்கோசாந்தி உள்பட பலர் நடித்த படம்.

ஊமைவிழிகள் படம் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டுவிட்டது. எப்படி என்று தெரியுமா? அந்தக்கால கட்டத்தில் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் படம் எடுத்தால் அது கலைப்படமாகவோ, குறும்படமாகவோ தான் இருக்கும் என்ற நிலை நிலவியது. அதைத் தகர்த்தெறிந்த படம் தான் ஊமை விழிகள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் அதுவரை சினிமாஸ்கோப்பில் வந்த படங்கள் சிவாஜியின் ராஜராஜசோழன், கமல்-ரஜினி நடிப்பில் வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் என இரண்டே படங்கள் தான். அவை தோல்வியை சந்தித்தன. எனவே அடுத்து சினிமாஸ்கோப்பில் படம் எடுக்கவே தயங்கி வந்தனர் தயாரிப்பாளர்கள். அவர்களின் தயக்கத்தையும் உடைத்தெறிந்த படம் தான் ஊமை விழிகள்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஆபாவாணன் தான் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களை வைத்து புதுமையான கதையுடன் படத்தை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார். திரைக்கதை, வசனம், பாடல்களை ஆபாவணன் தான் எழுதினார். மனோஜ்-கியான் எனும் இரட்டையர்கள் இசை அமைத்தனர்.

இப்படத்தில் ஜெய்சங்கர் பத்திரிகை ஆசிரியர், ஸ்ரீவித்யா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். பிலிம் இன்ஸ்டிட்யூட்; மாணவர்கள் அருண்பாண்டியன், கார்த்திக் ஆகியோரும் நடித்தனர். போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜயகாந்த் நடித்தார். அவருக்கு படத்தில் பாடலே கிடையாது. இளம் ஹீரோவாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் காதோரம் நரை முடியுடன் படத்தில் விஜயகாந்த் தோன்றியிருப்பார்.

படத்தின் ப்ளஸ் பாயிண்ட் இதுதான். கிளைமாக்ஸ் காட்சி போலவே படம் முழுவதையும் எடுத்துச் சென்று ரசிகர்களை இருக்கை நுனிக்குக் கொண்டு வந்து பரபரப்பாக்கி இருப்பார் இயக்குனர் அரவிந்தராஜ். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியோ ரசிகர்களுக்கு உச்சக்கட்ட பதற்றத்தை தொற்றிக்கொள்ள வைத்து விடுகிறது.

ரவிச்சந்திரன் வில்லன் நடிப்பில் அற்புதமாக நடித்து இருப்பார். படத்தின் விளம்பர சுவரொட்டிகளில் பிரதான வில்லனான ரவிச்சந்திரனின் படத்தையே காட்ட வில்லை...! அவ்வளவு சஸ்பென்சாம்..!

படத்தில், கண்மணி நில்லு காரணம் சொல்லு, மாமரத்து பூவெடுத்து, ராத்திரி நேரத்து, தோல்வி நிலையென, நிலைமாறும் உலகில், குடுகுடுத்த ஆகிய பாடல்கள் இன்றளவும் பேசப்படுகிறது.

இவற்றில் ராத்திரி நேரத்து பூஜையில் பாடல் இன்றைய ரசிகர்களையும் ஆட்டம் போட வைக்கிறது.!

இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் அந்தக்கால வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்புவதுண்டு. நிலைமாறும் உலகில் பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறிவிட்டது. அதில் இடம்பெறும் தினம் தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு என்ற வைர வரிகளைக் கேட்ட இப்ராகிம் ராவுத்தர் இயக்குனரை பாராட்டி இது அருமையான படமாக வெளிவரும் என்றாராம்.

படத்தில் வரும் சூன்யக்கார பாட்டி யார் தெரியுமா? இவர் பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் அம்மா வேடத்தில் நடித்தவர் தான். இவருக்கு சினிமா வாய்ப்பே இல்லாமல் இருந்த கால கட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் ஆபாவாணன்.

ஈழத்தமிழர் விடுதலை பிரச்சனை நடந்த காலகட்டத்தில் வெளியான படம். அதனால் அவர்களுக்காக படத்தில் தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற பாடல் இடம்பெற்றது.

ஈழத்தமிழர்களின் தேசியகீதமாக இந்தப்பாடல் இருந்து வந்ததாம். கனடா, பிரான்ஸ் நாடுகளிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்தப்பாடல் தான் தேசியகீதமாம்.

முதலில் சென்சார்போர்டு படத்திற்கு தடை விதித்துள்ளது. அதன்பிறகு டெல்லிக்குப் போய் போராடி சென்சார் சான்றிதழைப் பெற்று வந்துள்ளது படத்தயாரிப்புக்குழு.

33 ஆண்டுகளுக்கு முன்பு படம் போராடி வெளிவந்த நிலையில் ஆக.12ல் சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் இருந்த பரபரப்பான வாசகம்..இதுதான்.

ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம்.
நாங்கள் சுதந்திரம் அடைகின்றோம்..!

Similar News