இன்று நடிகர் மோகனின் பிறந்த நாள்-சிறப்பு பதிவு

நடிகர் மோகனின் பிறந்த நாளையொட்டிய பதிவு

;

By :  adminram
Published On 2021-08-23 11:19 IST   |   Updated On 2021-08-23 11:19:00 IST

கன்னட படமான கோகிலாவில் பாலு மகேந்திராவால் அறிமுகமான மோகன் தமிழில் மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகமானார். பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், இதயக்கோவில், தென்றலே என்னை தொடு, விதி, நூறாவது நாள், பிள்ளை நிலா, மெல்ல திறந்தது கதவு, குங்குமச்சிமிழ்,நான் பாடும் பாடல், 24 மணி நேரம், ரெட்டை வால் குருவி, பாசப்பறவைகள், பாசமழை, மெளன ராகம். பாடு நிலாவே என அந்த நாட்களில் மோகன் காட்டில் பணமழைதான் அந்த அளவு மோகனுக்கு படங்கள் வந்து குவிந்தது.

சினிமாவில் அதிர்ஷ்டம் என்று ஒன்று சொல்வார்கள் அல்லவா அந்த அதிர்ஷ்டத்துக்கு நல்ல உதாரணமாக மோகனை சொல்லலாம். ஏனென்றால் இவர் வாயசைக்கும் பாடல்களுக்கு குரல் கொடுப்பது எஸ்.பி.பி, இசையமைப்பது இளையராஜா, இவருக்கு படங்களில் குரல் கொடுப்பது எஸ்.என் சுரேந்தர் ஆனால் மோகன் பேசியது போலவே இருக்கும். எஸ்.என் சுரேந்தர் குரல் கொடுக்காமல் போன பாசப்பறவைகள், உருவம் போன்ற படங்களில் மோகன் சொந்த குரலில் பேசி இருப்பார் அது ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுபோல எஸ்.பி.பி மோகனுக்காக பாடிய மேடைப்பாடல்களும், அதற்கு இசையமைத்த இளையராஜாவையும் விட்டு விட்டு பஸ் ஸ்டாண்டில் விற்கிற எம்.பி 3 சிடிக்கள் கூட இன்றும் மோகன் ஹிட்ஸ் என்றே போட்டு வருகின்றன இதை அதிர்ஷ்டம் என்றுதானே சொல்ல வேண்டும். மோகனின் படங்களுக்கு இன்றளவும் மார்க்கெட் வேல்யூ உள்ளதை இது போல விசயங்கள் கூறுகிறது.

மோகனை 80களின் மாதவன், அப்பாஸ் என்றுதான் சொல்ல வேண்டும் மாதவன் அப்பாஸுக்கு பெண் ரசிகைகள் அதிகம் அது போலவே மோகனுக்கும் பெண் ரசிகைகள் அதிகம் இருந்தனர்.

பாலு மகேந்திரா, மணிரத்னம், ஸ்ரீதர் என பல மூத்த இயக்குனர்களின் படங்களில் நடித்த மோகன் பாரதிராஜா, பாலச்சந்தர் படங்களில் நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு இன்றும் வருத்தம். பாரதிராஜா படங்களில் தான் நடிக்கவில்லை ஆனால் பாரதிராஜாவின் உதவியாளர்களான மணிவண்ணன், மனோபாலா போன்றவர்கள் அவரை நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.

அதே போல் தயாரிப்பாளர் கோவைத்தம்பி மோகனின் படங்களை அதிகம் தயாரித்தார். கோவைத்தம்பி தயாரித்த அதிக படங்களில் மோகன் நடித்து அது வெற்றிப்படமாகியது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மோகனின் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆனது. மோகன் நடித்த பல படங்கள் சில்வர் ஜூப்ளி ஆனதால் அவர் வெள்ளி விழா நாயகன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

தனக்கு காதல், ரொமான்ஸ் மட்டும் வராது வில்லத்தனமும் நன்றாக வரும் என்பதை விதி, நூறாவது நாள் போன்ற படங்கள் மூலம் மோகன் நிரூபித்தார்.மோகன் 80கள் முழுவதும் பிஸியாக இருந்த நேரத்தில் சென்னையில் பாம்குரோவ் ஹோட்டலில் நிரந்தரமாக ஒரு அறையில் தங்கி இருந்தாராம். நீண்ட வருடங்கள் அந்த அறையில் மோகன் தங்கி இருந்ததால் இன்றும் ஹோட்டல் ஊழியர்கள் அந்த அறையை சந்தோஷமாக சொல்கின்றனர்.

மோகன் நடிப்பில் வந்த பாசப்பறவைகள் படம்தான அவருக்கு கடைசியாக ஹிட் ஆன படம். அதன் பின் வந்த உருவம் படம் பெரிய அளவில் ஓடவில்லை ஆனால் இன்றளவும் உருவம் படம் பேசப்படுகிறது. பல வருடங்கள் நடிக்காமல் இருந்த மோகன் 10 வருட இடைவேளைக்கு பிறகு அன்புள்ள காதலுக்கு படத்தை இயக்கி நடித்தார் இந்த படத்துக்கு தேவா இசையமைத்து இருந்தார். படம் பெரிய அளவு வரவேற்பில்லை.

பிறகு டிவி சீரியல்கள் சிலவற்றை தயாரித்தார் மோகன். இப்போதும் அவ்வப்போது ஏதாவது ஒரு படங்களில் நடித்து வருகிறார். மோகன் கதாநாயகன் ரோல்களை மறந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாகும்.

இன்று பிறந்த நாள் காணும் நடிகர் மோகனுக்கு வாழ்த்துக்கள்

Similar News