விடாமுயற்சிக்கும் வலைப்பேச்சுக்கும் என்னதான் பிரச்சினை? உடைத்து பேசிய பிஸ்மி
விடாமுயற்சி: விடாமுயற்சி படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அந்தப் படத்தை பற்றியும் அஜித்தை பற்றியும் அதிகமாக விமர்சனம் செய்தது வலைப்பேச்சும் பிஸ்மியும்தான். அதனால் வலைப்பேச்சுக்கும் விடாமுயற்சிக்கும் ஏதாவது பிரச்சினையா? அல்லது அஜித் மீது தனிப்பட்ட வன்மமா என பிஸ்மியிடம் கேட்ட போது அவரே சொன்ன பதில் இதோ:
நமக்கும் அஜித்துக்கும் எந்த ஒரு தனிப்பட்ட வருத்தமோ கோபமோ எதுவுமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அஜித் ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருந்த பொழுது எனக்கு மிக நெருக்கமான நண்பர். இன்னும் சொல்லப்போனால் நம் மீது மிகப்பெரிய மரியாதை அஜித்திற்கு உண்டு. அதைப்போல எனக்கும் அஜித் மீது மரியாதை உண்டு. அன்பு அக்கறை எல்லாமே உண்டு. அவருக்கும் அதைப்போல பரஸ்பரமாக இரண்டு பேருக்குமே புரிந்து கொள்ளும் நபர்கள்தான் நாங்கள். அதே மாதிரி இந்த படம் குறித்து நாங்கள் விமர்சனம் பண்ணியதற்கு காரணம் என்னவெனில் அஜித் இவ்வளவு பெரிய நடிகர்.
தனிக்காட்டு ராஜா: இன்று விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு போன பிறகு இவர்தான் தனிக்காட்டு ராஜா. அப்பேர்ப்பட்ட ஹீரோ உடைய படத்தை இயக்குகிற வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் .அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் சொல்கிறோம். அவ்வளவுதான். மற்றபடி அஜித் மீது அவரைப் பற்றி விமர்சனம் பண்ண வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு கிடையாது. அஜித் என்கிற ஒரு பெரிய நடிகரை வைத்து இப்படி ஒரு மொக்க படத்தை கொடுத்து விட்டீர்கள் என்ற வருத்தம் தான். அதன் பிறகு இங்கே என்ன மாதிரியான ஒரு போக்கு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும் .
அப்படிப்பட்ட சேனல் கிடையாது: ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் அந்தப் படத்தை நன்றாக இல்லை என்றாலும் கூட அதை கொண்டாட வேண்டும். அந்த நடிகருடைய ரசிகர்கள் நம் வீடியோவை பார்ப்பார்கள். நமக்கு அதிகமான வியூஸ் கிடைக்கும். அதை பயங்கரமாக ஷேர் செய்வார்கள். நம்மையும் கொண்டாடுவார்கள் என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் வலைப்பேச்சு அப்படிப்பட்ட சேனல் கிடையாது. நமக்கு என்ன தோன்றுகிறதோ அதை நாங்கள் சொல்கிறோம். நல்ல படம் என்றால் நல்ல படம் .மோசமான படமா என்றால் மோசமான படம்.
அப்படித்தான். அதன் பிறகு வலைப்பேச்சு என்கிற சேனலில் ஒரு செய்தியாக ஒரு விஷயத்தை சொல்கிறோம். உங்களைப் போன்ற யூடியூப் சேனல்கள் எங்களுடன் பேட்டி எடுக்கும் பொழுது அதன் தொடர்ச்சியாக இன்னும் கொஞ்சம் விளக்கமாக நாங்கள் பேசுகிறோம். அப்போ ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து சேனல்கள் எங்களை அணுகும் பொழுது இதே கேள்வியை முன் வைக்கும் பொழுது ‘இல்லங்க இந்த கேள்விக்கான பதிலை நான் அந்த சேனலில் சொல்லி விட்டேன்.’ அப்படியெல்லாம் கடந்து போக முடியாது. ஒரு சேனல் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
வன்மமா?:இதை பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். அதன் பிறகு ஒரு ஐந்து சேனல்களிலும் இந்த படத்தை பற்றி இப்படி பேசுகிறார்கள். அப்போ அஜித் மீதும் அந்த படத்தின் மீதும் இவர்களுக்கு ஏதோ ஒரு வன்மம் இருக்கும் போல என நினைக்கிறார்கள். அப்படி எந்த ஒரு வன்மமும் எந்த காலத்திலும் எங்களுக்கு கிடையாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு விஷயம் வலை பேச்சு சேனலை தொடர்ந்து பார்க்கிறவர்களுக்கு தெரியும். எங்களது விமர்சனத்தில் எந்த காலத்திலும் யாரையும் தனிப்பட்ட வன்மத்திலோ கோபத்திலோ குறிப்பிட்டு பேசியதே கிடையாது. அதேநேரம் விடா முயற்சி படத்தை நன்றாக இல்லை என்று சொல்லும் பொழுது அஜித் ரசிகர்கள் இப்படி ஒரு குற்றச்சாட்டை எங்கள் மீது வைக்கிறார்கள். இன்னொரு விஷயம் வலைப்பேச்சு என்பது ரசிகர்களுக்கான சேனல் கிடையாது .மக்களுக்கான சேனல். அவர்கள் எங்களை புரிந்து வைத்திருக்கிறார்கள் அது போதும் என பிஸ்மி கூறினார்.