ஆகக்கடவன: முள்ளு காட்டை மட்டும் காட்டுனா போதுமா? புது முயற்சியை இப்படி பண்ணிட்டாங்களே!
தர்மாவின் இயக்கத்தில் ஆகக்கடவன என்ற ஒரு படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ஆதிரன் சுரேஷ், சிஆர்.ராகுல், சதீஷ் ராமதாஸ், வின்சென்ட், மைக்கேல் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா. எடிட்டிங் வேலைகளை சுமித் பாண்டியன், பூமேஷ் தாஸ் காம்போ செய்துள்ளது. படத்திற்கு இசை அமைத்தவர் சந்தான அனேபஜகன்.
படம் முழுவதும் ஒரு வித்தியாசத்தை செய்துள்ளார்கள். ஆண்கள் மட்டுமே நடித்துள்ள படம் தான் ஆகக்கடவன. இதற்கு முன்னால் ஜோதிகா நடித்த சிநேகிதியே படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்து இருந்தனர். அது சஸ்பென்ஸ் திரில்லர் படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ஆகக்கடவன எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
படத்தின் கதை என்னன்னா ஒரு மெடிக்கல் ஷாப்ல 3 பேர் வேலை செய்றாங்க. அந்தக் கடை ஓனர் அதை விற்க நினைக்கிறாரு. அதனால இவங்களும் வாங்கலாம்னு பார்க்குறாங்க. அதே நேரத்துல அவங்க சேர்த்து வச்ச பணம் திருடப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர்கள் அடுத்து என்ன செய்யலாம்னு நினைக்கிறாங்க.
அந்த 3 பேர்ல ஒருவர் ஊருக்குப் போய் சொத்தை வித்தாவது எப்படியும் மெடிக்கலை வாங்கிடலாம்னு பார்க்குறாரு. அதனால நண்பருடன் பைக்கில போறாங்க. போற வழியில பைக் பஞ்சராகுது. அது ஒரு அடர்ந்த முள் காடு. அங்கே பஞ்சர் கடையைத் தேடி அலையறாங்க. கடைசியா ஒரு கடைக்குப் போறாங்க. அங்கு ஒரு பிரச்சனை வருது. அதுக்குப் பிறகு என்ன நடக்குதுங்கறதுதான் படத்தோட கதை.
ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், சதீஷ் ராமதாஸ் மூவரும் நண்பர்களாக நடித்துள்ளனர். இதுல ஆதிரன் சுரேஷ் கதாபாத்திரத்துக்கு ஏற்ற குழப்பமான மனநிலையை முகத்தில் காட்ட டிரை பண்ணிருக்காரு. ஆனா அந்தப் பாவனை தான் வரல. டப்பிங்லயும் பயங்கரமா மூச்சு வாங்கறாரு. சதீஷோட பாடிலாங்குவேஜ் படு ஸ்பீடா இருக்கு. அதனால அந்தக் கேரக்டர் எடுபடுது. மற்றபடி வில்லனா வின்சென்டும், மைக்கேலும் வர்றாங்க. அவங்க சும்மா முறைக்கத் தான் செய்றாங்களே தவிர வேற ஒண்ணும் தெரியல. படத்துல எல்லா நடிகர்களும் இப்படித்தான் நடிச்சிருக்காங்க.
முதல் 20 நிமிஷம் படம் பார்க்கும்போது ஒண்ணுமே புரியாம இருக்கு. இதுல வேற பிரபஞ்ச விதி அது இதுன்னு தத்துவமா பேசி கழுத்தை அறுக்குறாங்க. டைரக்டர் தர்மா இந்தப் படத்தில் தான் அறிமுகம். புதுமையா இயக்கணும்கற ஆர்வத்துல வந்துருக்கிறது தெரியுது. ஆனா திரைக்கதையில ஏன் இவ்ளோ சொதப்பல்னுதான் புரியல.
எல்லாமே புதுமுகங்களாக இருப்பதால நமக்கு ரொம்ப டென்ஷன் ஆகல. மியூசிக் பரவாயில்ல. ஒளிப்பதிவுல கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம். என்ன ஒண்ணு படத்துல புதுமைன்னா முள்ளுக்காட்டுல போகும்போது ரொம்ப நம்மைப் பதட்டத்துக்கு ஆளாக்குறாங்க. படத்தோட வெற்றிக்கு அது மட்டும் போதுமா?
ரெண்டரை மணி நேரம் ரசிகனை உட்கார வைக்க வேண்டாமா? சஸ்பென்ஸ், திரில்லர் படங்களில் இது வித்தியாசம்தான் என்றாலும் இன்னும் கொஞ்சம் டிரை பண்ணியிருக்கலாம்.