முடிச்சிவிட்டீங்க போங்க… ஷங்கர் Out… இதெல்லாம் படமா? கேம்சேஞ்சர் Honest Review!

By :  Akhilan
Update: 2025-01-10 06:01 GMT

Gamechanger: பல வருட எதிர்பார்ப்புகளை கடந்து இன்று ராம்சரண் நடிப்பில் கேம்சேஞ்சர் திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இத்திரைப்படம் எப்படி இருந்தது என விமர்சனத்தின் தொகுப்பு.

கேம்சேஞ்சர் தொடக்கம்: கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட முதல்வன் கதையை ஒத்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மட்டும் இல்லை என்ற திருப்தி ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.

பெரிய அளவில் புதுமையான கதை இல்லை தான். இருந்தும் பல வருடங்கள் கழித்து ஷங்கருக்கு கிடைத்திருக்கும் வித்தியாசமான கதை. லட்சியங்களை நம்பும் ஒருவனுக்கு சிலர் துரோகம் செய்கின்றனர். அதற்கு பழி தீர்க்க வருகிறான் அவருடைய வாரிசு. பார்த்து பழகிய கதையில் சின்ன ட்விஸ்ட்டை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

கேம்சேஞ்சர் கதை: முதலமைச்சர் சத்திய மூர்த்தியின் மகனாக அமைச்சர் வேடத்தில் பொப்பிலி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா. கலெக்டராக வருகிறார் ராம்சரண். ஊழலை தடுக்க எஸ் ஜே சூர்யாவை குறி வைக்கிறார். அப்பாவின் முதல்வர் இருக்கைக்கு ஆசைப்படும் எஸ்ஜே சூர்யா.

முதலமைச்சர் சத்தியமூர்த்தி இறக்கும்போது சொல்லும் கடைசி ஆசையில் ராம்சரனின் ஃப்ளாஷ்பேக் விரிகிறது. இறுதியில் என்ன நடந்தது யார் இந்த ராம்சரண் என்பதுதான் மொத்த கதையாக அமைந்திருக்கிறது.

ராம்சரண் நடிப்பில் எந்தவித சமரசமும் இல்லாமல் தன்னுடைய அக்மார்க் ஆக்ஷன்களில் அசரடித்து விடுகிறார். கலெக்டராக வரும்போதும், அப்பா வேஷத்தில் அப்பண்ணாவாக வரும்போதும் முதிர்ச்சி காட்டி நடித்து இருக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா பெரிய பரபரப்பு இல்லாமல் நடித்து இருக்கிறார். அவரை யூஸ் பண்ண மிஸ் செய்தும் விட்டார் ஷங்கர்.

அஞ்சலி, கியாரா அத்வானிக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை செய்து இருக்கின்றனர். இருந்தும் ராம்சரண் மற்றும் கியாரா காதல் காட்சிகள் பல இடங்களில் சொதப்புகிறது. பாடலுக்கு பிரம்மாண்டம் கொடுத்த ஷங்கரால் அவர்களிடமிருந்து கெமிஸ்ட்ரியை எடுக்க முடியாமல் தவறிவிட்டார்.

காதல் காட்சியே முதல் பாதியில் படும் போராக அமைந்து விடுகிறது. இதனால் கதை முக்கிய இடத்தை நோக்கி நகரும்போது அலுப்புத்தட்ட தொடங்கி விடுகிறது. ஆனால் படத்தை பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்தை இடைவெளிக்கு முன்னால் வரும் கால் மணி நேர ட்விஸ்ட் தான் காப்பாற்றி வைத்திருக்கிறது.

முதல் பாதியை பார்த்துவிட்டு ஷங்கர் காலி என நினைப்பவர்களுக்கு அடுத்த பாதி ஓரளவு திருப்தியை கொடுத்திருக்கிறது. ஸ்ட்ராங்கான பிளாஷ்பேக் பின்னர் படம் சூடு பிடிக்கிறது. ராம்சரண் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சண்டைக்கு பின்னர் படம் ஓரளவு யூகிக்க முடிந்தாலும் நன்றாக இருக்கிறது.

90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாடல்கள் பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை. இதில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹைரணா பாடல் எடிட்டிங் பிரச்சினையால் படத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. காட்சிகள் மீதான ஈர்ப்பை பிஜிஎம் குறைத்து விடுகிறது.

மொத்தமாக ஷங்கரின் கம் பேக் என எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சர் பெரிய சறுக்கலை கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவு தப்பி இருக்கிறார். ஆனால் இது கண்டிப்பாக ஷங்கரின் பெஸ்ட் இல்லைதான்.

Tags:    

Similar News