வெறித்தனமா இறங்கி அடிக்கும் சசிக்குமார்!. ஃப்ரீடம் டிரெய்லர் எப்படி இருக்கு?!...
Freedom Movie: தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சசிக்குமார். இயக்குனராக இருந்தாலும் தொடர்ந்து நடிகராக பல படங்களிலும் நடித்திருக்கிறார். அயோத்தி, நந்தன் போன்ற படங்கள் பெரிதும் பேசப்பட்டன. அதேபோல், இலங்கை தமிழராக சசிக்குமார் நடித்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படமும் ஒரு சிறந்த ஃபீல் குட் படமாக அமைந்தது.
இந்நிலையில்தான், சசிக்குமாரின் அடுத்த படமாக ஃபிரீடம் உருவாகியுள்ளது. இதுவும் இலங்கை தமிழர்கள் பற்றிய கதைதான். 30 வருடங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்த பலரையும் பிடித்து வேலுரில் உள்ள ஒரு இடத்தில் காவல்துறையினர் சிறை வைத்தனர். அங்கு அகதிகள் பல பிரச்சனைகளை சந்தித்தனர். போலீசாரின் அடக்குமுறை தாங்க முடியாமல் கொதித்தெழுந்த அகதிகள் சிலர் கலவரத்தை உண்டு செய்து அங்கிருந்து தப்பினர். அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே ஃபீரிடம் படம் உருவாகியுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி போலவே இந்த படத்திலும் சசிக்குமார் இலங்கை அகதிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இந்த படத்தை கழுகு, கழுகு 2 உள்ளிட்ட சில படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் லிஜிமோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வீடியோவில் இலங்கை அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், அவர்களை போலீசார் அடித்து சித்ரவதை செய்யும் காட்சிகளு இடம் பெற்றிருக்கிறது. அவர்களில் ஒருவராக இருக்கும் சசிக்குமாரையும் போலீசார் அடித்து சித்ரவதை செய்கிறார்கள்.
ஒருகட்டத்தில் அவர் பொங்கியெழுந்து போலீசாரை தாக்கும் காட்சிகளும் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. டிரெய்லர் முழுவதும் இலங்கை அகதிகளை போலீசார் சித்ரவதை செய்யும் காட்சிகளும், ஒருகட்டத்தில் அவர்கள் பொங்கியெழுந்து போலீசாரை தாக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.
இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் சசிக்குமார் ஆக்ரோஷமாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார் என ஏற்கனவே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் தற்போது வெளியான டிரெய்லர் அதை உறுதி செய்திருக்கிறது. டிரெய்லர் வீடியோவை பார்க்கும்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு பின் ஃப்ரீடம் படம் சசிக்குமாருக்கு மற்றொரு ஹிட் படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.