பாடகர் மனோ- பிறந்த நாள் பதிவு

தமிழ் சினிமாவில் பாடகர் மனோ ஃபாஸில் இயக்கத்தில் வந்த பூவிழி வாசலிலே படத்தில் வரும் அண்ணே அண்ணே நீ என்னா சொன்ன என்ற பாடலின் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் பாடல்கள், சொல்ல துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற தேன்மொழி எந்தன் தேன்மொழி பாடலின் மூலம் பிரபலம் ஆனார்.

மனோவின் இயற்பெயர் நாகூர்பாபு. இவர் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி என்ற இடத்தில் பிறந்தவர் ஆவார்.

இவரின் தந்தை ரசூல் ஆல் இந்தியா ரேடியோவில் மியூசிசியன் ஆக பணிபுரிந்தவர். தாய் ஷகிதா ஆந்திராவில் அந்தகாலத்தில் பாப்புலரான மேடை நடிகை ஆவார்.

முதலில் மனோ 1970ம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரம் செய்ய ஆரம்பித்தார் மனோ. சிறு வயதிலேயே கர்நாட்டிக் உள்ளிட்ட இசைகளை கற்று தேர்ந்தார்.

தமிழில் இளையராஜா தான் இவரை அறிமுகப்படுத்தினார். நாகூர் பாபு என்ற பெயரை மனோ என மாற்றியவரும் இளையராஜாதான்.

அவரின் அண்ணே அண்ணே, தேன்மொழி, மதுர மரிக்கொழுந்து வாசம் உள்ளிட்ட பாடல்கள்தான் மனோவை பிரபலம் ஆக்கியது.

தமிழ் சினிமாவில் 80களில் மிக முக்கிய பின்னணி பாடகராக இருந்தவர் மனோ. இளையராஜா இசையில் வரும் பெரும் பாடல்களில் எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், மனோ போன்றவர்களே பெரும்பான்மையான 80களின் ஸ்வீட் பாடல்களை பாடினர்.

அதிலும் மனோ சித்ரா சேர்ந்து பாடிய 80களின் பாடல்கள் பல 80களில் அதிரி புதிரி ஹிட் ஆகின. பாடல்களை பாடியவர்கள் மனோ, சித்ரா என்ற அறிவிப்பு வானொலிகளில் அடிக்கடி அந்த நேரத்தில் வரும் அந்த அளவு பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அந்தக்கால மனோ ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகள் பலருக்கு மனோ சித்ரா என்றே பெயர் கூட வைத்துள்ளனர். மனோ சித்ரா என்று பெண்களின் பெயர்கள் தற்போது தமிழ்நாட்டில் ஓரளவு உண்டு.

இவர் பாடிய பாடல்கள் எல்லாமே தித்திப்பு ரகம் என்று சொல்ல வேண்டும். இளையராஜா இசையில், வேலையில்லாதவன் தான், குண்டு ஒண்ணு வச்சிருக்கேன், உங்கணக்குத்தான் தப்பாச்சமா, தூளியிலே ஆடவந்த, சங்கீத பூமழையே, வெட்டுக்கிளி வெட்டிவந்த வெட்டிவேரு வாசம், ஜின்கிடி ஜின்கிடி உனக்கு போன்ற இன்னும் எண்ணற்ற கேட்க திகட்டாத பாடல்களை பாடியுள்ளார்.

ரஹ்மானின் இசையில் இவர் பாடிய முக்காலா முக்காபுலா என்ற காதலன் படத்தின் பாடல் இவரின் திரை வாழ்வில் மணி மகுடமாய் அமைந்தது.

பல பாடல்களை குரல் மாற்றி பாடுவதில் வல்லவரான மனோ இந்திரன் சந்திரன் படத்தில் இடம்பெற்ற அடிச்சுது கொட்டம் என்ற பாடலை குரல் மாற்றி கர கர குரலில் கஷ்டப்பட்டு பாடி ஒரு வாரம் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு கிடந்தாராம்.

பல தமிழ் படங்களில் மனோ நடிக்கவும் செய்துள்ளார். அதில் முக்கியமான திரைப்படம் கமல்ஹாசனுடன் நடித்த சிங்கார வேலன் படம் ஆகும். மலையாளத்திலும் சூர்ய மனசம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் படங்கள் தெலுங்கு மொழியில் டப் செய்யப்படும்போது ரஜினி , கமல் படங்களுக்கு ரஜினி, கமல் கதாபாத்திரங்களுக்கு மனோதான் டப்பிங்க் பேசுவார். இப்படி டப்பிங் கலைஞராகவும் மனோ பணிபுரிந்துள்ளார்.

மனோவின் மகனும் 2012ல் வெளிவந்த நாங்க என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்போதும் இளையராஜா தனது சொந்த இசை கச்சேரிகளுக்கு 80களில் எஸ்.பி.பி, ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பாடிய பாடல்களை பாடுவதற்கு கூட மனோவைத்தான் அழைப்பார்.

இன்று பிறந்த நாள் காணும், இப்படியாக பல இசை சாதனைகளை செய்துள்ள பாடகர் மனோவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

Related Articles

Next Story