jananayagan

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியான இன்று வெளியாகவிருந்த நிலையில் கடந்த பல நாட்களாகவே தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்காததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

தணிக்கை வாரியம் சொன்ன எல்லா மாற்றங்களையும் செய்து கொடுத்த பின்னரும் வேண்டுமென்று கால தாமதம் செய்கிறார்கள் என கூறி ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த தணிக்கை வாரியம் ‘மேலும் சிலர் படம் பார்க்க வேண்டும்.. ராணுவம் தொடர்பான சில காட்சிகளை அனுமதி பெறாமல் எடுத்திருக்கிறார்கள்.. எனவே சான்றிதழ் வழங்க நான்கு வார கால அவகாசம் வேண்டும்’ என சொல்லி இருந்தனர்.

இது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தனி நீதிபதி பி.டி.ஆஷா கூறியிருந்தார். அதன்படி இன்று காலை தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.டி.ஆஷா ஜனநாயகன் படத்திற்கு சென்சார் தணிக்கை வாரியம் U/A சான்றிதழை கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். எனவே, படம் விரைவில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்திருக்கிறது. தணிக்கை வாரிய தலைவர் சார்பில் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யபப்ட்டிருக்கிறது. வருகிற 12ம் தேதி இதுபற்றி விசாரிக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்திருக்கிறது. எனவே, அந்த தீர்ப்பை பொறுத்தே ஜனநாயகன் எப்போது ரிலீஸ் என முடிவு செய்யப்படும்.

ஜனநாயகனுக்கு பிரச்சனை தீர்ந்தது என ரசிகர்கள் சந்தோஷப்பட்ட நிலையில் தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே, ஜனநாயகனுக்கான முட்டுக்கட்டை இன்னும் நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.