முதல் படமே தோல்வி!.. சினிமாவில் தாக்குப்பிடிக்க போராடிய எம்.ஜி.ஆர்!.. தூக்கிவிட்ட அந்த திரைப்படம்!..
சினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்து ஒரு இடத்தை பிடிப்பதோ, தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைப்பதோ சுலபமில்லை. எல்லாம் சரியாக அமையவேண்டும். ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஓட வேண்டும். நல்ல தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கதை அமைய வேண்டும். இல்லையெனில் தோல்வியே கிடைக்கும்.
60களில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆருக்கே இது நடந்திருக்கிறது. 30 வருடங்கள் நாடகங்களில் நடித்திருந்தாலும் சிவாஜிக்கு கிடைத்தது போல முதல் படத்திலேயே ஹீரோ வேஷம் எம்.ஜி.ஆருக்கு கிடைக்கவில்லை. சினிமாவில் போராடி நுழைந்து சுமார் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
அதாவது 1940,50களில் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக வலம் வந்த தியாகராஜ பகவாதர், டி.ஆர்.மகாலிங்கம், ரஞ்சன் போன்ற நடிகர்களின் படங்களில் ஒரு முக்கிய வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். ராஜகுமாரி திரைப்படத்தில்தான் எம்.ஜி.ஆர் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார்.
ராஜகுமாரி மட்டுமல்ல. அதன்பின் எம்.ஜி.ஆர் நடித்தது எல்லாமே சரித்திர படங்கள்தான். அந்த படங்களில் புரட்சிகரமான வசனங்களை எம்.ஜி.ஆர். பேசுவார். மேலும், அனல் பறக்கும் கத்தி சண்டைகள் அதில் இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆருக்கு பெரும் வெற்றியை பெற்று கொடுத்த நாடோடி மன்னன் படமும் சரித்திர கதை கொண்ட திரைப்படம்தான்.
ஆனால், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா சமூக படங்களை நோக்கி நகர்ந்தது. சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்கள் அதுபோன்ற கதைகளில் நடித்து வந்தனர். எனவே, எம்.ஜி.ஆரும் சமூக படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு சரித்திர படங்கள் மட்டுமே செட் ஆகும். சமூக படங்களில் அவரால் நடிக்க முடியாது என சிலர் பேசினார்கள்.
எனவே, அறிஞர் அண்ணா எழுதிய ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்கிற கதையில் ஹீரோவாக நடித்தார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்த படம் படுதோல்வி அடைந்தது. இனிமேல் நம்மால் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எம்.ஜி.ஆருக்கே வந்தது. ஆனால், அதன்பின் அவர் நடித்து வெளியான ‘திருடாதே’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து எம்.ஜி.ஆரால் சமூகபடங்களிலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை திரையுலகினருக்கு கொடுத்தது.