உன்னைதான் தேடிட்டு இருக்கேன்… இசையமைப்பாளர் வீட்டு வாசலில் கொக்கி போட்ட தனுஷ்…
Dhanush: தமிழ் சினிமாவின் வித்தியாசமான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். தனித்துவ குரலால் இசை ரசிகர்களை வசீகரிக்கும் ஷான் ரோல்டன் தனுஷுடன் இணைந்த சம்பவம் சுவாரஸ்யமானது.
ஷான் ரோல்டனின் உண்மையான பெயர் ராகவேந்திர ராஜா ராவ். பாரம்பரிய இசைக்குடும்பம் இவருடையது. ஷான் ரோல்டனின் தந்தை பிரபலமான மிருந்தங்க வித்வானான ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ். பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் இவரது தாய் வழி தாத்தா ஆவார். இவரது மனைவி லலிதா சுதா பின்னணிப் பாடகி.
சிறுவயது முதலே இசையில் ஆர்வம் கொண்டிருந்த ஷான் ரோல்டன், ஏ.ஆர்.ரஹ்மானின் ரோஜா படம் மூலம் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்குள் வந்தார். ஆரம்பத்தில் கர்நாடக இசைக்கச்சேரிகளுக்கு வாசித்துக் கொண்டிருந்த இவர், பின்னர் தனது நண்பர்களுடன் இணைந்து ஷான் ரோல்டன் மற்றும் நண்பர்கள் என்கிற இசைக்குழுவை உருவாக்கினார்.
இந்த இசை நிகழ்ச்சிகளில் கவரப்பட்ட சி.வி.குமார், பாலாஜி மோகனின் வாயை மூடிப் பேசவும் படத்தின் தயாரிப்பாளரான வருண் மணியனிடம் இவரை பரிந்துரை செய்திருக்கிறார். அந்த புராஜக்டில் இருந்து அனிருத் வெளியேறிய நிலையில், ஷான் ரோல்டன் இசையமைத்தார். அந்தப் படத்தில் இவரது இசை பரவலான கவனம் பெற்றது. அதன்பின், முண்டாசுபட்டி, ஆடாம ஜெயிச்சோமடா மற்றும் 144 ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.
2016-ல் வெளியான ஜோக்கர் படம் ஷான் ரோல்டன் இசைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்தது. அந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்குப் பின், அதைக் கேட்டுவிட்டு நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அத்தோடு, இவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்தும் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
மேலும், 'இத்தனை நாள் உங்கள மாதிரி ஆளைத்தான் தேடிட்டு இருந்தேன்’ என்று சொன்னதோடு, ஜோக்கர் அனுபவங்கள் குறித்தும் கேட்டிருக்கிறார். அத்தோடு நில்லாமல், அடுத்த நாளே ஷான் ரோல்டனின் வீட்டுக்கும் நேரடியாகப் போய் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறார்.
அதன்பின்னரே, இருவரும் இணைந்து இயக்குநராக தனுஷ் அறிமுகமான ப.பாண்டி படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். அந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.