ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகவிருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டு தணிக்கை அதிகாரிகள் சொன்ன மாற்றங்களை செய்யப்பட்ட பின்னரும் சான்றிதழ் கொடுக்காமல் மறு தணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை அதிகாரிகள் கூறினார்கள்.
ஆனால் அதற்கும் காலதாமதம் செய்ததால் படக்குழு நீதிமன்றத்திற்கு சென்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து இன்று காலை வெளியான தீர்ப்பில் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை உடனே கொடுக்க வேண்டும் என தனி நீதிபதி பீ.டி ஆஷா உத்தரவிட்டார்.
ஆனால் அதை ஏற்காத தணிக்கை வாரியம் மேல்முறையீட்டுக்கு சென்றது. இது தொடர்பான வழக்கு இன்று மதியம் மூன்றரை மணிக்கு விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி உத்தரவுக்கு நீதிபதி தடை விதித்தார். மேலும் இது தொடர்பான வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரிக்கப்படும் என வழக்கை தள்ளி வைத்தார்.

இதையடுத்து 21ம் தேதி வரை ஜனநாயகன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருப்பதோடு. பட தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில்தான் சிலர் சொல்லும் செய்தி விஜய் ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு ஜனநாயகன் படம் வெளியாக வேண்டும். அப்படி ஆகவில்லை என்றால் தேர்தலுக்கு பின்னர்தான் படம் வெளியாகும். ஏனெனில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்.
அரசியல்வாதிகள் தொடர்புடைய, அரசியல் கருத்து கொண்ட, தேர்தல் தொடர்புடைய அல்லது ஒரு அரசியல் கொள்கையுடைய திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. ஏனெனில் இது தொடர்பான காட்சிகள் ஜனநாயகன் படத்தில் இருக்கிறது எனவே கண்டிப்பாக தேர்தல் ஆணையம் இதை எதிர்க்கும். எனவே தேர்தலுக்கு பின்னரே படம் வெளியாகும் நிலை ஏற்படும். எனவே பிரச்சனை எல்லாம் தீர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு ஜனநாயகன் வெளியாக வேண்டும்’ என அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.




