Connect with us

Cinema History

எம்.ஜி.ஆர் இறப்பில் சந்தேகம் – ஜெயலலிதா பற்ற வைத்த தீ… அதிர்ச்சி பின்னணி

1988-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா பற்ற வைத்த தீ தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பியது. `எம்.ஜி.ஆருக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார்கள். நான் ஆட்சிக்கு வந்தால், அதுபற்றி விசாரிக்க ஒரு நீதிபதியை நியமிப்பேன்’ என்பதுதான் அந்தத் தீ. அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், `எம்.ஜி.ஆர் தனது இறுதி நாட்களில் யார் யாரையெல்லாம் பார்த்தார்? யாருடைய வீடுகளுக்கெல்லாம் போனார்? அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவில் என்ன கலந்தார்கள்?’ என்று எதிர்க்கேள்வி எழுப்பியிருந்தார்.


உண்மையில் என்ன நடந்தது… இதுபற்றி எம்.ஜி.ஆரின் சிறப்பு மருத்துவராக இருந்த பி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அவர் என்ன சொன்னார்… எம்.ஜி.ஆர் இறந்த இரவன்று என்ன நடந்தது?

உடல்நலக் குறைவால் எம்.ஜி.ஆர், 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி உயிரிழந்தார். முதல்முறையாக எம்.ஜி.ஆருக்கு 1984-ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் சிறுநீரகம் செயழிலக்கவே, உடனடியாக அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சற்றே உடல் நலம் தேறிய அவர் 1985-ம் ஆண்டு சென்னை திரும்பினார். மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக அவர் 1985 பிப்ரவரி 10-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். முழுமையாக உடல்நலன் தேறாத அவர், அடுத்த இரண்டு ஆண்டுகள் அவ்வப்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வர வேண்டி இருந்தது.

அவர் சென்னையில் இருக்கும்போது, அவருடைய ராமாவரம் தோட்டம் வீட்டில் அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் மருந்துகளும் வைக்கப்பட்டிருந்தன. சிறப்பு மருத்துவர் பி.வி.சுப்பிரமணியம் தலைமையில் எட்டு மணி நேரத்துக்கு ஒரு மருத்துவர் என 3 மருத்துவர்கள் சுழற்சி முறையில் அவரைக் கவனித்துக் கொண்டனர். 1987-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி இரவு அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர் சுப்பிரமணியம் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இறப்பில் சந்தேகம் என ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பேசிய பிறகு, ஊடகங்களைச் சந்தித்து எம்.ஜி.ஆரின் சிறப்பு மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம் கொடுத்தார்.

டிசம்பர் 23-ம் தேதி இரவு நேரத்தில் எம்.ஜி.ஆரைப் பார்க்க மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் போயிருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆர் நல்ல உற்சாகத்துடன் மருத்துவரிடம் பேசியிருக்கிறார். அப்போது அவரது உடல்நலன் நன்றாகவே இருந்திருக்கிறது. சிறிது நேரத்தில் அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டிருக்கிறார். உடனடியாக அவரது இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை மருத்துவர்கள் சோதித்திருக்கிறார்கள். இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் போன்றவை இயல்பை விடக் குறைவாக இருக்கவே, `வாங்க நம்ம மருத்துவமனைக்குப் போகலாம்’ என மருத்துவர்கள் எம்.ஜி.ஆரை அழைத்திருக்கிறார்கள்.

ஆனால், `வேண்டாம். எனக்கு வியர்க்கவில்லை. என் உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது. நான் மருத்துவமனைக்கு வரவில்லை’ என்று கூறி எம்.ஜி.ஆர் மறுத்திருக்கிறார். அதன்பிறகு இரவு 8 மணியளவில் ஒரு டம்ளர் கஞ்சியும் 10 மணியளவில் மோரும் குடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். `நான் தூங்கப்போறேன். நீங்களும் தூங்குங்க’ என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, எம்.ஜி.ஆருடன் மருத்துவர்கள் முத்துச்சாமி, கல்யாண் சிங் ஆகியோர் உடனிருந்திருக்கிறார்கள்.

இரவு 12.30 மணியளவில் எம்.ஜி.ஆருக்கு இ.சி.ஜியும் இதயத் துடிப்பும் சரியாக இல்லை என்று எல்லோரும் பயந்து போயிருக்கிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டால் செய்யக் கூடிய முதலுதவிகளையும் செய்திருக்கிறார்கள். ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை. அதிகாலை 3.30 மணியளவில் எம்.ஜி.ஆர் உயிரிழந்தார். அதன்பிறகே அவரது இறப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி அம்மாளுக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதனால், எம்.ஜி.ஆர் இறப்பு குறித்து அவரிடம் மருத்துவர்கள் தயங்கி, தயங்கியே தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்டதும் அவர் கதறி அழுதாராம். எம்.ஜி.ஆரின் உடலைப் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அவரது உடலை எம்ஃபால்மிங் செய்தார்கள். இதற்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, கருணாநிதியும் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் அவரை அனுமதிக்கவில்லையாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top