
விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் போர்டில் பிரச்சனையை சந்தித்து வருகிறது. கடந்த டிசம்பர் 18ம் தேதி படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் சில மாற்றங்களை செய்யச் சொல்ல அதை செய்து டிசம்பர் 25ஆம் தேதி படத்தை கொடுத்து விட்டனர். அப்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுப்பதாக தணிக்கை வரியும் கூறியிருக்கிறது.
ஆனால் திடீரென படம் பார்த்த 5 பேரில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என சொன்ன சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு சென்சார் சான்றிதழை கொடுக்காமல் வைத்திருந்தனர். ரிலீஸ் தேதி நெருங்கியதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானபோது ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் உடனே கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வந்தது. ஆனால் இதை ஏற்காத சென்சார் போர்டு மேல்முறையீட்டுக்கு சென்றது.
இந்நிலையில் இன்று காலை தனி நீதிபதி பி.டி ஆஷா வழங்கிய தீர்ப்பின் முழு விபரம் தற்போது வெளியே தெரியவந்திருக்கிறது. ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து சான்றிதழ் அளிக்க ஒப்புக்கொண்ட பின் புகார் அளித்ததில் உள்நோக்கம் இருக்கிறது. இது ஆபத்தான நடைமுறை.. சான்றிதழ் அளிக்க ஒப்புக்கொண்ட பின் மறு ஆய்வுக்கு அனுப்ப தலைவருக்கு அதிகாரம் கிடையாது..
சான்றிதழ் வழங்குவதாக டிசம்பர் 22ம் தேதி அன்று கூறிய நாளே வாரிய தலைவருக்கான அதிகாரம் முடிந்து விட்டது. ஜனவரி 6ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து ஜனநாயகனுக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்துதான் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு விசாரணை சற்றுநேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.