Jananayagan: சும்மா இருந்திருந்தாலே சென்சார் கிடைச்சிருக்கும்!.. கோர்ட்டுக்கு போனதுதான் தப்பா?!…

Published On: January 9, 2026
jananayagan
---Advertisement---

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலீஸ் தள்ளி போயிருப்பதுதான் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி பட குழு சென்சருக்காக படத்தை அனுப்பியதாகவும் படம் பார்த்த தணிக்கை வாரிய அதிகாரிகள் சில மாற்றங்களை செய்ய சொல்ல அந்த மாற்றங்களை செய்து டிசம்பர் 25ஆம் தேதி படத்தை படக்குழு கொடுத்துவிட்டதாக தெரிகிறது.

அப்போது இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் என தணிக்கை அதிகாரிகள் வாய் வார்த்தையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சில நாட்கள் ஆகியும் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. அதோடு, ஏன் தாமதம் என்பதற்கான முறையான பதிலையும் தணிக்கை அதிகாரிகள் கூறவில்லை. ஒருபக்கம் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் வேறு வழியில்லாமல் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.

முதலில் படத்தில் மத உணர்வு புண்படுத்தப்பட்டிருப்பதாக தணிக்கை வாரியம் சொன்னது.. அதன்பின் ராணுவத்தின் இலச்சினை தவறாக பயன்படுத்தி இருப்பதாக சொன்னது.. இப்படி ஒவ்வொரு காரணமாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 9ம் தேதியான இன்று தீர்ப்பை வழங்குவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பை வாசித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்துக்கு சான்றிதழ் கொடுப்பதாக சொல்லிவிட்டு மீண்டும் மறு தணிக்கை என சொல்வது அராஜகம்.. எனவே ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இன்று மதியம் 3:30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது படத்திற்கு சென்சார் கொடுக்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தணிக்கை வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தார். மேலும் வரும் 21ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார். இதையடுத்து ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு பொதுவான கருத்து பரவி வருகிறது. அமைதியாக இருந்திருந்தாலே மறு தணிக்கை செய்து சான்றிதழ் கிடைத்திருக்கும். தயாரிப்பு நிறுவனம் பொறுமை காத்திருந்தால் அவர்களை படத்தை பார்த்து விட்டு இரண்டு நாட்களில் சான்றிதழ் கொடுத்திருப்பார்கள். காத்திருக்காமல் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றதால் தணிக்கை வாரியம் கோபமடைந்து இப்போது படம் வெளியாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது. நஷ்டம் தயாரிப்பாளருக்கு.. ஏமாற்றம் ரசிகர்களுக்கு’ என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.