கடந்த சில வருடங்களாகவே நடிகர் அஜித்குமார் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். கார் ரேஸுக்கு இடையே தான் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களிலும் நடித்தார். அதில் குட் பேட் அக்லி படம் பாஸிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது.
அந்த படத்தில் நடித்து கொடுத்துவிட்டு மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ளப்போனார் அஜித். அதன் பின் மீண்டும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தின் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. அதேநேரம் இந்த படத்தில் அஜித்துக்கு 185 கோடி சம்பளம், படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி என்பதால் தமிழ்நாட்டில் உள்ள எந்த தயாரிப்பாளரும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. இதையடுத்து அஜித்தின் குழு மும்பை சென்று அங்கு சில தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது வரை எந்த செய்தியும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில்தான் அஜித் திடீரென மலேசியா சென்று அங்குள்ள பிரபல முருகன் கோவிலில் சாமி கும்பிட்ட வீடியோக்கள் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ஏன் திடீரென்று மலேசியாவுக்கு போனார்? என தெரி்ந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் எழுந்திருக்கிறது. தற்போது அது வெளியே தெரிய வந்திருக்கிறது.

அஜித் மலேசியா சென்றதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று மலேசியாவிலும் ஒரு கார் ரேஸ் நடக்கவிருக்கிறது. விரைவில் அஜித் இதில் கலந்துகொள்ள வருகிறார். அதேபோல் இரண்டு விளம்பர படங்களிலும் அஜித் நடிக்கவிருக்கிறார். அது தொடர்பான ஷூட்டிங் மலேசியாவில் நடக்கவுள்ளதாம். எனவே, அதற்காகத்தான் அஜித் அங்கு சென்றிருக்கிறார் என்கிறார்கள். அதில் ஒன்று Campa Cola குளிர்பான விளம்பரம் மற்றொன்று ரியல் எஸ்டேட் தொடர்பானது என்கிறார்கள்.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு அஜித் சில விளம்பர படங்களில் நடித்தார். சினிமாவில் நடிக்க துவங்கிய பின் அவர் எந்த விளம்பர படத்திலும் நடிக்கவில்லை. அப்படியிருக்கும் போது திடீரென அவர் விளம்பர படங்களில் நடிக்க ஏன் முடிவெடுத்தார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சிலரோ அஜித்துக்கு இப்போது நிறைய பணம் தேவைப்படுகிறது. அவர் எப்போதும் பண விஷயத்தில் ஒரு ஸ்டைலை பின்பற்றுவார். படம் புக் ஆகும் வரை சொந்த பணத்தை செலவு செய்யமாட்டார். அடுத்த படம் உறுதியாகவில்லை. எனவேதான். விளம்பர படங்களில் நடிக்கபோய்விட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.