விடாமுயற்சி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக இதுதான் காரணமா?!.. அஜித் இதை யோசிச்சிருக்கணும்!..

by சிவா |
விடாமுயற்சி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக இதுதான் காரணமா?!.. அஜித் இதை யோசிச்சிருக்கணும்!..
X

Vidaamuyarchi: பெரிய நடிகர்கள் என்றாலே அவர்களுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். ரஜினி, விஜய், அஜித் என்றாலே அவர்கள் திரையில் சாகசங்களை செய்யும் மாஸ் ஹீரோவாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அது திரையில் இல்லை என்றால் ரசிகர்கள் ஏமாந்துபோவார்கள்.

உதாரணத்திற்கு ரஜினி வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவது மாதிரி, வில்லனிடம் அடி வாங்குவது மாதிரியோ, குடும்பத்துடன் கண்ணீர் விட்டு அழுவது போலவோ நடித்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். ஏனெனில், ரஜினி என்றால் பன்ச் வசனம் பேச வேண்டும், வில்லனை துவம்சம் செய்ய வேண்டும் என்கிற இமேஜ் அவர் மீது விழுந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர் நடிப்பில் வெளியான பாஷா திரைப்படம்தான்.

இமேஜை மீறி நடித்த அஜித்: ரஜினிக்கு பின் விஜயும், அஜித்தும் அதே ரூட்டில் போனார்கள். ஏனெனில், மாஸ் ஹீரோ ஆனால்தான் அதிக சம்பளமும் வாங்க முடியும். ஆனால், தனது திரையுலக அனுபவத்தில் விடாமுயற்சி படத்தில் ஒரு புதிய முயற்சியை செய்து பார்த்திருக்கிறார் அஜித். காணாமல் போன மனைவியை தேடி அலையும் வேடம், அப்படி தேடும்போது வில்லனின் அடியாட்களிடம் தொடர்ந்து அடி வாங்குகிறார். அர்ஜூன் உள்ளிட்ட பலரும் அவரை ‘நீ என்ன பெரிய ஹீரோவா?’ .. பூமரு’ என்கிறார்கள்.

ஒரு மாஸ் ஹீரோ இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டார்கள். முதன்முறை அஜித் இந்த இமேஜிலிருந்து வெளியே வந்து நடித்திருக்கிறார். உண்மையில் இது பாராட்டுக்குரியது. ஹாலிவுட்டில் நடிகர்கள் இப்படித்தான் நடிப்பார்கள். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை வேறு. அவர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது.

அஜித் வைத்த நம்பிக்கை: அஜித் பத்து பேரை பறக்கவிட்டு பன்ச் வசனம் பேசினால்தான் அவர்களுக்கு பிடிக்கும். படப்பிடிப்பில் இதை மகிழ் திருமேனி இதை சொன்னபோது ‘அதை அடுத்த படத்தில் வைத்து கொள்வோம். என் ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என சொன்னார் அஜித். அவரின் நம்பிக்கை பொய்த்துவிட்டது.

நடிகர்களின் இமேஜ்: இங்கு எல்லா நடிகர்களுக்கும் ஒரு இமேஜ் இருக்கிறது. அந்த இமேஜுக்கு ஏற்றது போல நடித்தால் மட்டுமே படம் ஓடும். மகாநதி, குணா, பாபநாசம், அன்பே சிவம், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களில் ஹீரோயிசம் காட்டாமல் நடித்து பாராட்டை வாங்கியிருக்கிறார் கமல். பாபநாசம படத்தில் மகள்கள் மற்றும் மனைவி கண்முன் போலீசிடம் அடிவாங்குவார் கமல். அதை ரசிகர்கள் ஏற்றுகொள்வார். அவர் உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ் அது. ஆனால், காலா படத்தில் போலீசிடம் ரஜினி அடி வாங்குவதை அவரின் ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால்தான் அந்த படம் ஃபிளாப் ஆனது.

தோல்விக்கு காரணம்: விடாமுயற்சியும் இந்த வகைதான். அதோடு, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார் அஜித். ஆனால், அவரின் மனைவியாக வரும் திரிஷாவுக்கே கள்ளக்காதல் இருக்கிறது. அவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என கதையை அமைத்திருப்பது படத்திற்கு பெரிய பலவீனமாகிவிட்டது. அதை அஜித் சாதரணமாக கடந்து போவது போலவும் காட்சிகள் வருவதால் படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

அதனால்தான் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்திருக்கிறது விடாமுயற்சி.

Next Story