×

மாஸ்டருக்கு 100 சதவீத இருக்கை... விஜயின் சுயநலம் நியாயமா?... 

 

கடந்த 9 மாதங்களாக தமிழகத்தை கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா பரவல் அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக திரையரங்குகள் மூடப்பட்டது. சமீபத்தில் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி கொடுக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டது. ஆனாலும், சிறிய மற்றும் புதுமுக நடிகர்கள் நடித்த சின்ன படங்கள் வெளியானதால் தியேட்டரில் கூட்டம் கூடவில்லை.

இந்நிலையில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 13ம் தேதி வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி எனில் போட்ட காசை எடுக்க முடியாது என்பதால் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கொடுக்கும் படி விஜய் நேரில் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். முதல் 3 நாட்களுக்கு மட்டுமாவது 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கொடுங்கள் என அவர் கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

முதலாவதாக ஏற்கனவே உருவான கொரோனா தாக்கமே இன்னும் தமிழகத்தில் இன்னும் குறைவில்லை. தற்போது புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவ துவங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 20 பேரை தாக்கியுள்ளது. தமிழகத்திலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. அதிலும், இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும் என பீதியை கிளப்புகிறார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசிடம் விஜய் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் திரையுலகை நம்பியுள்ள தொழிலாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என சினிமா துறையே நலிவடைந்திருப்பது உண்மைதான். மாஸ்டர் திரைப்படம் மீண்டும் ரசிகர்களை தியேட்டரை நோக்கி படையெடுக்க வைக்கும் என்பதால் மீண்டும் சினிமா துறை உயிர் பெறும் என்பதில் சந்தேகமில்லை.  

ஆனால், அதேசமயம், ரசிகர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயமும் இருக்கிறது. இதை விஜய் யோசிக்கவில்லையா? என்கிற கேள்வி எழுகிறது. என்னை என்னை வேண்டுமானாலும் செய்யுங்கள். என் புகைப்படத்தை, பேனரை கொளுத்துங்கள். ஆனால், என் ரசிகனை எதுவும் செய்து விடாதீர்கள் என மேடைகளில் பேசும் விஜய் கொரோனா காலத்தில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்பது சுயநலம் இல்லையா? என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் இப்படி கேட்பதற்கு காரணம் இருக்கிறது. அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் போது 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்கள் அமர்ந்து தொடர்ச்சியாக ஒரு வாரம் ஹவுஸ்புல் ஆனால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். அதிலும், தயாரிப்பாளர் விஜய்க்கு நெருங்கிய உறவினரும் கூட.. எனவேதான் துடித்துப்போய் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். 

விஜயின் கோரிக்கையை ஏற்று 100 அல்லது 75 சதவீத இருக்கைக்கு அரசு கொடுக்கும் அனுமதி என்பது மாஸ்டருக்கு மட்டுமல்ல, மற்ற படங்களுக்கும் கிடைக்கத்தான் போகிறது. விஜய் பொதுவாகத்தான் கேட்டிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் பொங்குகிறார்கள். 

ஆனால், தன்னுடைய படம் வெளியாகும் போதுதான் விஜய்க்கு இந்த அக்கறை வருமா? என்கிற கேள்வி எழாமல் இல்லை...

From around the web

Trending Videos

Tamilnadu News