×

தமிழ்திரையுலகில் காதல் ரசம் சொட்டும் முத்தான 10 படங்கள்

 
bombay

காதல்.....மூன்றெழுத்தில் ஒரு சத்தான வார்த்தை. இது உயிருள்ள வரை உலகில் இருந்துகொண்டே இருக்கும். மனிதப்பிறவியின் மகத்தான உணர்வு காதல். இதனால்தான் மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு, உறவு, கோபம், தாகம், விரக்தி, வெறுமை, நட்பு என அனைத்து விதமான உணர்வுகளும் தோன்றுகின்றன. இந்த காதல் எப்படி எங்கு தோன்றியது என்பதற்கு விடைகாண முற்பட்டால், ஆதாம் ஏவாள் காலத்தைத் தான் சொல்கிறார்கள். 

   முதன்முதலில் அவர்களை இறைவன் அந்த மரத்தின் ஆப்பிளை மட்டும் பறித்து விடாதீர்கள் என்று சொல்லவும், அவர்கள் அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்து விடும் ஆவலில் பறித்து ருசி பார்க்கின்றனர். பின்னர் அவர்கள் கீழே குனிந்து பார்க்கவும் ஓடி ஒளிகின்றனர். முதன்முதலாக வெட்கம் தோன்ற ஆரம்பித்த இடம் இது. அதன்பிறகுதான் மனிதன் நாகரீக உலகிற்குள் வர ஆரம்பித்தான். அவனுக்கு தேவைகள் அதிகரித்தன. உழைத்துப் பிழைக்க ஆரம்பித்தான். ஏன் அதன்பிறகு தான் மனிதன் சிந்திக்கவே ஆரம்பித்தான். அப்பேர்ப்பட்ட மாற்றத்திற்கு காரணம் தான் காதல். 

   கதை சொல்லியே வளர்ந்து பழக்கப்பட்டவர்கள் நம் தமிழர்கள். நம் முன்னோர்களின் வீரம், காதல், கொடை ஆகியவற்றைக் கேட்டு கேட்டு அதன்படி செய்தும் சாதனை புரிந்தவர்கள். அதிலும் காதல் கதை என்றால் அனைவரும் ஆர்வமுடன் கேட்பார்கள். அப்படிப்பட்ட கதையை ஒளியும் ஒலியும் கலந்து ஜனரஞ்சகமாக சொல்ல முடியும் என்றால் அது சினிமாவில் மட்டுமே சாத்தியம். அதுவும் நம் ;தமிழ்சினிமாவில் காதலை வரிந்து கட்டி வந்த படங்கள் ஏராளம். காதல் ரசம் சொட்டும் சில படங்களை இங்கு பார்ப்போம். 

  காதல் ஓவியம் (1982)

  ஒரு பாடகருக்கும், நாட்டியக்காரிக்கும் இடையேயான காதல் கதை தான் காதல் ஓவியம். படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன்கிண்ணம். பாடல்களுக்காகவே எடுக்கப்பட்ட படம். பாரதிராஜாவின் இயக்கத்தில் கண்ணன், ராதாவின் எதார்த்தமான நடிப்பில் வெளியான படம். ஜனகராஜ், ராதாரவி, அர்ச்சனா, காந்திமதி ஆகியோரும் நடித்திருப்பர். இதில் பார்வையற்றவராக கண்ணன் நடித்திருப்பார். புதுமுகமாக இருந்தாலும் சிறப்பாக நடித்திருப்பார். நாதம் என் ஜீவனே...வெள்ளிச்சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் நேரமிது, பூவில் வண்டு கூடும்...சங்கீத ஜாதி முல்லை....போன்ற தேன் சொட்டும் பாடல்கள் நிறைந்த படம். படத்திற்கு இசையமைத்தவர் ராகதேவன் இளையராஜா. 

பம்பாய் (1995):

   வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காதல் செய்து ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளும் விறுவிறுப்பான காதல் படம். மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா, நாசர், பிரகாஷ்ராஜ்; நடிப்பில் உருவான படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ரகங்கள். குச்சி குச்சி ராக்கம்மா பாடலையும், அந்த அரபிக்கடலோரம் பாடலையும் இன்றும் யாராலும் மறக்க முடியாது. 

காதல் கோட்டை(1996): 

   முகம் பார்க்காமல் ஒரு காதலை சாத்தியப்படுத்தியுள்ளார் இயக்குனர் அகத்தியன். கடிதத்தின் மூலம் ஒருவரை ஒருவர் காதலித்து பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து படத்தின் கிளைமாக்ஸில் ஒருவரை ஒருவர் சந்தித்து இருவரும் இணைகின்றனர். படம் முடியும் வரை ஒரு த்ரில்லிங்கை நாம் அனுபவிக்க முடியும். அஜீத்குமார், தேவயாணி, ஹீரா, கரண், மணிவண்ணன், தலைவாசல் விஜய், பாண்டு ஆகியோரது நடிப்பில் உருவான இப்படத்திற்கு தேனிசைத்தென்றல் தேவா இசையமைத்துள்ளார். நலம் நலமறிய ஆவல் பாடல் ஒரு ரம்மியமான உணர்வை நமக்கு தருகிறது. 

காதலுக்கு மரியாதை (1997):

   மிகவும் கண்டிப்புடன் வளர்ந்து வரும் காதலியை காதலிக்க வைத்து, திருமணத்திற்காக ஓடிச்செல்லும் காதலரகள் மனம் மாறி பெற்றோர்களின் அனுமதி பெற்று திருமணம் செய்கின்றனர். இயக்குனர் பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி, சிவக்குமார், சார்லி, ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ள இப்படங்களில் பாடல்கள் அனைத்தும் அருமை. என்னைத் தாலாட்ட வருவாளா, ஆனந்த குயிலின் பாட்டு போன்ற மனது மறக்காத பாடல்கள் நிறைந்த படம்.

 காதல் மன்னன் (1998):

   மூத்த மகள் தனது காதலனுடன் ஓடி விடவே, இரண்டாவது மகள் திலோத்தம்மா அதிக கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறாள். பின்னர் சிவா (அஜீத்) மீது திலோத்தம்மாவுக்கு காதல் வருகிறது. காதல் என்ற வார்த்தையையே பிடிக்காத தன் தந்தையிடம் தனது காதலைப் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறார் திலோத்தம்மா. காதல் கைகூடியதா என்பதை வெண்திரை விளக்குகிறது. சரண் இயக்கத்தில் அஜீத்குமார், மானு, கிரிஷ் கர்னட், எம்.எஸ்.விஸ்வநாதன், விவேக், கரண், தாமு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பரத்வாஜ் இசையமைப்பில் வரும் உன்னைப் பார்த்த பின்பு நான்...நானாக இல்லையே...! என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. 

 காதலர் தினம் (1999):

   பாடலுக்காக ஓடிய படம் என்றால் அது இதுதான். மற்றபடி எதார்த்தமான காதல் கதைதான். கதிர் இயக்கத்தில் குணால் சிங், சோனாலி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரோஜா...ரோஜா..., தாண்டியா ஆட்டமும் ஆட...என்ன விலையழகே...! ஆகிய பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது.
  
துள்ளாத மனமும் துள்ளும் (1999):

   தனது எதிர்பாராத தவறால் கண்களை இழக்கும் காதலியை காக்கும் காதலனும், காதலனை நேரில் வெறுத்துக்கொண்டும், காதலனை பாராமல் காதலனின் பெயரை மட்டும் அறிந்து கொண்டு, காதலித்து வரும் காதலியும் எவ்வாறு இணைகின்றனர் என்பதே படத்தின் கதை. அத்தனை பாடல்களும் மாஸ் ரகங்கள். 

எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன் நடிப்பில் உருவான நகைச்சுவை கலந்த காதல் படம். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். தொடு தொடு எனவே வானவில், 'இன்னிசை பாடி வரும்...", 'இருபது கோடி நிலவுகள் கூடி...பெண்மை ஆனதோ..!" போன்ற பாடல்கள் நம்மை திரையில் பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

 அலைபாயுதே(2008):

   மணிரத்னத்தின் காதல் படம் இது. மாதவன், ஷாலினி நடிப்பில் உருவான இப்படத்தை காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்திருப்பார் இயக்குனர் மணிரத்னம். ஷாலினியின் துருதுரு நடிப்பு படத்திற்கு பிளஸ் பாயிண்ட். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் செம தூள். 'சிநேகிதனே...சிநேகிதனே...", 'செப்டம்பர் மாதம்...."போன்ற பாடல்கள் ரம்மியமானவை.

 மின்னலே(2001):
   இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் இணைந்த முதல் படம். மாதவன், ரீமாசென,; அப்பாஸ், நாகேஷ், விவேக், பாத்திமா பாபு நடிப்பில் உருவான விறுவிறுப்பான இப்படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன். 'பூப்போல்...பூப்போல்...", 'வெண்மதி...வெண்மதியே...நில்லு..."பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். 

காதல் (2004):

 ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து எடுக்கப்பட்ட படம் காதல். இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் உருவான எதார்த்தமான காதல் கதை. இயக்குனர் ஷங்கர் தயாரிக்க, ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுபவை. 'உனக்கென இருப்பேன்....", 'தொட்டு தொட்டு போகும் என்னை..."போன்ற பாடல்கள் நெஞ்சைத் தொடுபவை.

From around the web

Trending Videos

Tamilnadu News