×

என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு, கண்களே பேசுகிறதே....!
அந்த ஜாம்பவானின் உடல் மொழிக்கு அப்படி ஒரு உத்வேகம்...!

 
செவாலியே சிவாஜியின் டாப் 10 படங்கள் 
 
parasakthi

இந்தப் படத்தை மிஸ் பண்ணவே கூடாதுப்பா...அப்பேர்ப்பட்ட படம்"என்று ஒரு சிலர் சொல்வதைக் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட படங்கள் தமிழ்சினிமாவில் ஏராளமாக இருந்தாலும், நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசனின் படங்களைப் பார்ப்பது என்றால் அது தனி சுகம்தான். அவரது நடிப்பில் வெளியாகும் படங்களைப் பார்க்க வேண்டும் என்றால் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பாகத் தான் இருக்கும். அந்தவரிசையில் அவரது மறக்க முடியாத முத்தாய்ப்பான படங்களை டாப் 10 ஆக வரிசைப்படுத்தியுள்ளோம். உங்கள் பார்வைக்கு....

1. பராசக்தி
     
     சிவாஜி கணேசனின் முதல் படம். அதுமட்டுமல்ல. பகுத்தறிவு திராவிடம் பேசிய முதல் படமும் இதுதான். அக்காலத்திலேயே கோயிலையும், அங்கு நடக்கிற அநீதிகளையும் ஆக்ரோஷமாக பேசிய படம். பராசக்தி என்று பெயர் வைத்து ஆன்மீகவாதிகளை கவர்ந்து திரையரங்கிற்கு வரவழைத்து அவர்களுக்கு பாடம் புகட்டிய படம் இது என்று சொன்னால் மிகையில்லை. கலைஞரின் கதை வசனத்தில் உருவான இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் கோர்ட் சீனில் சிவாஜி பேசிய நீண்ட வசனத்தைத் தான் இன்று வரை திரையுலகிற்கு வரும் புதுமுக நடிகர்கள் மனப்பாடம் செய்து நடித்துக்காட்டி சினிமா வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். இது அவர்களுக்கு பரீட்சைப் பாடமாகவே அமைந்து விட்டது. 

என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள், கண்களே பேசுகிறதே.... அந்த ஜாம்பவானின் உடல் மொழிக்கு அப்படி ஒரு உத்வேகம் என்று தான் சொல்ல வேண்டும். 

ஆனால் இந்தளவில் படம் வெற்றி பெறும் என தயாரிப்புத் தரப்பு கூட நினைத்துப் பார்க்கவில்லையாம். 
அந்தளவிற்கு மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் பராசக்தி.

2. மனோகரா 

   இதுவும் கலைஞரின் கம்பீரமான வசனத்தில் உருவான படம் தான். படத்தில் இடம்பெறும் தர்பார் வசனங்கள் சிவாஜியின் நடிப்பிற்கு மென்மேலும் மெருகூட்டியவை. இவ்வளவு கம்பீரமாக தெளிவான உச்சரிப்புடன் இந்த வசனங்களை யாராலும் பேச முடியாது. அவருக்கு நிகர் அவரேதான். மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற கண்ணாம்பா பேசும் வசனம் இன்று வரை பிரபலமாகவே உள்ளது. 
 
3. வீரபாண்டிய கட்டபொம்மன் 

    1959-ம் ஆண்டு வெளியான விடுதலை வேட்கையைத் தூண்டிய படம் வீரபாண்டிய கட்டபொம்மன். படத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக சிம்மசொப்பனமாக வெகுண்டெழுந்த ஒரு மாவீரன் கட்டபொம்மனாக சிவாஜிகணேசன் வாழ்ந்திருப்பார். இப்படம் வெளியாகும் வரை நாடகமாக மட்டும் 100 முறையாவது பட்டிதொட்டிகளில் எல்லாம் அரங்கேற்றமாகி இருக்கும். திரைப்படம் வெளியான பின்பும் 12 முறை நாடகம் அரங்கேறியது. ஜாக்சன் துரையிடம், 'வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா அல்லது எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா இல்லை நீ மாமனா, மச்சானா...மானங்கெடட்டவனே...எதற்கு கேட்கிறாய் கப்பம்..? யாரைக் கேட்கிறாய் கப்பம"; என்று வீரவசனம் சிவாஜி பேசும் போது திரையரங்கம் அதிர ஆரம்பிக்கிறது. இந்த வசனமும் புதுமுக நடிகர்களக்கு ஒரு பாடம்தான்.

4. தில்லானா மோகனாம்பாள்

    நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், நாட்டிய பேரொளி பத்மினியும் இணைந்து நடித்த காவிய படம்.  இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்த படம் இது.  நலந்தானா...நலந்தானா...உடலும் உள்ளமும் நலந்தானா..., மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன...பாடல்கள் இன்று வரை எவர்கிரீன் சாங்காகவே உள்ளன. 

5. ராஜராஜசோழன் 

   தஞ்சைத் தமிழ் மண்ணில் பிறந்த நடிகர் சிவாஜி ராஜராஜசோழனாகவே வாழ்ந்து காட்டிய படம்.
வழக்கம்போல் தனது கம்பீரமான நடிப்பிற்காகவே பேசப்பட்ட படம் இது. மன்னர் என்றால் இவர் தான் மன்னர் என்று சொல்லும் அளவிற்கு சிவாஜி படத்தில் கம்பீரமாக நடித்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டார். 1973ம் ஆண்டு வெளியான இப்படத்தின் தூய தமிழ் வசனங்களும், பாடல்களும் பலரது பாராட்டையும் பெற்றவை. 

6. கர்ணன்

   தமிழ் சினிமாவில் வரலாற்று படங்களை எடுத்த பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய படம் கர்ணன். இப்படத்தில் கோபம், பெருமிதம், வெட்கம், கருணை, கம்பீரம், காதல், கண்ணீர் என நவரசங்களையும் கண்முன் கொண்டு வந்து சிவாஜிகணேசன் படத்தில் கர்ணனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார். படத்தில் பாடல்கள் அத்தனையும் தேனாறு. கர்ணன் திரைப்படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

7. பாசமலர்

   மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே...என்ற பாடல் அப்போதைய தமிழ் ரசிகர்களை செல்லும் இடமெல்லாம் முணுமுணுக்க வைத்தது, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இன்னிசையில் வெளியான படம் இது. அண்ணன்- தங்கை பாசத்திற்கு உதாரணமான படம். இயக்குநர் பீம்சிங் படத்தை வெகுநேர்த்தியாக காட்சிக்கு காட்சி செதுக்கியிருப்பார். சாவித்ரியின் நடிப்பும் படத்தில் அற்புதமாக இருக்கும். படத்தில் ஒரு காட்சியையும் குறை சொல்ல முடியாது. நாமும் படத்துடனேயே படம் முழுவதும் பயணித்த உணர்வு ஏற்படும். நீண்ட நேரம் ஓடும் படமாக இருந்தும,; படம் அதற்குள் முடிந்து விட்டதே என முடிந்தும் கூட இருக்கையில் இருந்து எழுந்திருக்க மனம் வராது. அப்படி ஒரு படம் தான் பாசமலர். 

8. ராஜபார்ட் ரங்கத்துரை 
   
    நாடக நடிகராக நடித்திருக்கும் சிவாஜி படம் இது. உறவுகளால் ஏமாற்றப்படும் கதை. இந்த படத்தைக் காப்பியடித்தே பல படங்கள் வந்து விட்டன. ஆனால் அசல் போல மற்றபடங்கள் ஹிட்டாக வில்லை. இந்தப் படத்தை பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும் சினிமா ரசிகர்கள் சிவாஜியின் நடிப்புக்கு ஈடு இணையே இல்லை என சிலாகித்துச் சொல்வதை கண்கூடாக நம்மால் பார்க்க முடியும். 

9. கப்பலோட்டிய தமிழன் 

   இதுவும் சுதந்திரப் போராட்ட காலக் கதைதான். படத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜிகணேசன். இப்படத்தின் இயக்குனர் பி.ஆர்.பந்துலு. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுக்கும் சொந்தக்காரர் யாரென்றால் நம் மகாகவி பாரதியார்தான். சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படம் இது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு காட்சிக்கு காட்சி பின்னியிருப்பார் சிவாஜி. இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் சுதந்திரத் தாகம் வீறுகொண்டு எழும். 'வெள்ளிப்பனி மலையின் மீது உலாவுவோம். அந்த மேலை கடல் முழுதும் கப்பல்  விடுவோம்...பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்...எங்கள் பாரத தேசமென்று தோள் தட்டுவோம்..."என்ற பாடல் படத்தில் முத்தாய்ப்பான பாடல். 

10. தெய்வமகன் 

   சிவாஜிகணேசன் 3 மாறுபட்ட வேடங்களில் நடித்த படம். 3 வேடங்களில் முகத்தில் காயத்தழும்புடன் நடித்திருக்கும் சிவாஜியின் நடிப்பை அனைவரும் பிரமிப்பாகப் பார்த்து ரசித்த படம். படத்தின் பாடல்களும், வசனங்களும் இன்று வரை பிரபலம்தான். சிவாஜியின் நடிப்பை மேலும் மெருகூட்டிய படங்களின் பட்டியலில் இப்படம் தவறாமல் இடம்பிடிக்கும். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News