tamil movie reviews
“கலக்கப்போவது யாரு மாதிரி இருக்கு…” பிரின்ஸ் தேறுமா?? தேறாதா??… ரசிகர்கள் என்ன சொல்றாங்க??
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆங்கிலேயர் மரியா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
“பிரின்ஸ்” திரைப்படத்தை அனுதீப் கே.வி. இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் தெலுங்கில் “ஜதி ரத்னலு” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியவர். எப்போதும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு ஒரு மாஸான எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இத்திரைப்படத்திற்கு அதிகளவில் புரோமோஷன் பணிகளில் படக்குழு இறங்கவில்லை. எனினும் சிவகார்த்திகேயனுக்குரிய வரவேற்பு குறையவில்லை.
இந்த நிலையில் இன்று “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு காலை காட்சிக்கு வந்த ரசிகர்கள் இத்திரைப்படத்தை குறித்து என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம்.
ஒருவர் “படம் முழுவதும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பார்த்தது போல் இருக்கிறது. முழுவதும் மொக்கை ஜோக்குகள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எதிர்பார்ப்போடு வருபவர்களுக்கு படம் மொக்கையாகத்தான் இருக்கும்” என கூறுகிறார்.
மற்றொருவர் “படம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இடம்பெற்ற சில காட்சிகளை எல்லாம் தொகுத்து இத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். புதிதாக ஒன்றுமே இல்லை. காமெடியும் சுமாராகவே இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்காக ஒரு முறை பார்க்கலாம்” என கூறுகிறார்.
ஒருவர் “படம் சுத்தமாக நன்றாகவே இல்லை. ‘கிரிஞ்ச்’ போல் உள்ளது. காமெடி காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை” என கூறுகிறார். மற்றொருவர் “சிவகார்த்திகேயன் வழக்கம்போல் நடித்திருக்கிறார். எதுவும் புதிதாக இல்லை. சத்யராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார்” என கூறுகிறார்.
ஒருவர் “சிவகார்த்திகேயன் மிகவும் கியூட்டாக இருக்கிறார். நடனத்தில் பிச்சி உதறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும்” என கூறுகிறார். மற்றொருவர் “எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும். படம் சூப்பாரா இருக்கிறது. இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளிதான்” என உற்சாகமாக கூறுகிறார்.
இதனை வைத்து பார்க்கும்போது மிகவும் கலவையான விமர்சனங்களே “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு வருகின்றன. எனினும் இன்று நண்பகல், மாலை காட்சிகளுக்கு வரும் பார்வையாளர்களை வைத்துதான் படம் தேறுமா? தேறாதா? என்பது தெரியவரும்.