×

அடி மேல் அடி! கமலுக்கு செக் வைக்கும் லைக்கா - இந்தியன் 2 தொடருமா?

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கான சம்பள விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கும், லைக்கா நிறுவனத்திற்கும் இடையே புகைச்சல் நீடித்து வருவது தெரியவந்துள்ளது.
 

இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் எந்த நேரத்தில் தொடங்கினாரோ அப்போதிலிருந்தே அவருக்கு பிரச்சனை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஷங்கர் சரித்திரத்திலேயே இல்லாத ஒன்றாக படத்தின் பட்ஜெட் இதுதான், அதற்குள் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என லைக்காவுக்கும் அவருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்ட பின்னரே படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

படப்பிடிப்பு துவங்கிய நிலையில் கமல்ஹாசனுக்கு மேக்கப் சரியில்லை என 2 மாதம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் அரசியல், பிக்பாஸ் என பிஸியாக கமல் இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அடுத்து, ஷங்கர் நடிக்க வைக்க நினைத்த சில நடிகர், நடிகையர்கள் நடிக்க முடியாமல் போய் வேறு நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

அதன்பின் ஒருவழியாக படப்பிடிப்பு துவங்கியது. அப்போதுதான் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் நடந்தது. அதைத்தொடர்ந்து கமல், ஷங்கர், லைக்கா தரப்பு என அனைவரும் விசாரணை கமிஷனுக்கு ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். எனவே, இந்தியன் 2 படப்பிடிப்பு கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

தற்போது கமலின் சம்பள பிரச்சனை பூதாகரம் ஆகியுள்ளது. அதாவது, சில வருடங்களுக்கு முன்பு லைக்கா தயாரிப்பில் ’சபாஷ் நாயுடு’ திரைப்படத்தை கமல் துவங்கினார். படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து முடிந்த நிலையில் அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே, அப்படத்திற்கு கமலுக்கு கொடுத்த சம்பளத்தை ‘தலைவன் இருக்கிறான்’ படம் மூலம் சரி கட்ட லைக்கா நினைத்தது.  ஏ.ஆர்.ரகுமான் இசை என அறிவிக்கப்பட்ட அப்படமும் அப்படியே நின்று போனது. எனவே, சபாஷ் நாயுடுவிற்காக கமல் வாங்கிய சம்பளத்தை இந்தியன் 2-வில் சரி கட்ட லைக்கா கருதுகிறது. ஆனால், அதை கமல் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 

படப்பிடிப்பில் 3 பேர் மரணமடைந்த விவகாரத்தில் கமலும், லைக்காவும் அறிக்கைகளை வெளியிட்டு வார்த்தை போர் நடத்திக்கொண்டதன் பின்னணியில் இருப்பது இந்த காரணம்தான் என தகவல் கசிந்துள்ளது.

இந்த பிரச்சனை முற்றி சாமாதானம் ஏற்படவில்லை எனில் இந்தியன் 2 திரைப்படமே டிராப் ஆகும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா!...

From around the web

Trending Videos

Tamilnadu News