கோட் திரைப்படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இதுவே அவரிடம் கடைசி படம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவில் பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா ஹிரோவாக நடித்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் படம் உருவாகியிருக்கிறது.
அதேநேரம் தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். மேலும் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அரசியல் தொடர்பான காட்சிகளையும் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். 2026 ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் உலகமெங்கும் ரிலீஸ் என்பதால் பட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
தற்போது டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் ஜனநாயகன் படத்தின் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது. இதில் சிட்டி என சொல்லப்படும் சென்னை உரிமையை குடும்பஸ்தன் படத்தின் தயாரிப்பாளர்தான் 8 கோடியே ஒரு லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார். அது என்ன 8 கோடியே ஒரு லட்சம் என யோசித்தால் அதில் ஒரு சுவாரஸ்யமான செய்தி அடங்கியிருக்கிறது.
ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என் நிறுவனத்திற்கு 9ம் நம்பர் என்பது சென்டிமெண்டாம். எனவேதான் 8 கோடியோடு ஒரு லட்சத்தை சேர்த்து 8 கோடியே ஒரு லட்சமாக விலை பேசியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
