கோன் ஐஸ் தாடி!.. முறுக்கு மீசை!.. ஆர்.ஜே.பாலாஜி படத்துக்காக புதிய லுக்கில் சூர்யா!...
Suriya 45: நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. துவக்கத்தில் தடுமாறினாலும் போகப்போக நந்தா, காக்க காக்க, பிதாமகன் போன்ற படங்கள் மூலம் நடிப்பில் மெருகேறினார். இவருக்கென ரசிகர்களும் உருவானார்கள். காதல் மற்றும் ஆக்ஷன் படங்கள் என மாறி மாறி நடித்தார்.
சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என அதிரடி ஆக்சன் படங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வரும் நடிகர் இவர். புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவரின் மனைவி ஜோதிகாவும் பள்ளிகளின் தரம் பற்றி பரபரப்பான கருத்துக்களை கூறியிருந்தார்.
இதனால், ஒரு குறிப்பிட்ட கூட்டம் சூர்யாவுக்கு எதிராக எப்போதும் பேசி வருகிறார்கள். அவரின் கங்குவா படம் வெளியானபோது அவர்களிடமிருந்த மொத்த வன்மத்தையும் கக்கினார்கள். படம் வெளியாகி முதல் காட்சியிலேயே படம் நன்றாக இல்லை என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
கங்குவாவை காலி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆக்ரோஷமாக அவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்கள். ஒரு பக்கம் படத்திலும் சில குறைகள் இருக்க படம் வெற்றியை பெறவில்லை. வெளியான 2, 3 நாட்களிலேயே தியேட்டர்களில் காத்து வாங்கியது.
கங்குவா படத்தில் தான் போட்ட உழைப்பு ரசிகர்களால் சிலாகிக்கப்படும், பேசப்படும் என எதிர்பார்த்து, நம்பிக்கையுடன் இருந்த சூர்யாவுக்கு ரிசல்ட் ஏமாற்றத்தை கொடுத்து அவரை அப்செட் ஆக்கியது. ஆனால், அதோடு நின்றுவிட முடியாது அல்லவா. எனவே, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க துவங்கினார்.
இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். அவரோடு திரிஷாவும் வழக்கறிஞராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் சூர்யா என்ன மாதிரியான தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற புகைப்படம் வெளியாகியுள்ளது. கோன் ஐஸ் தாடி, முறுக்கிய மீசை என அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.