3 டைரக்டர் மாறிட்டாங்களே!.. சிவகார்த்திகேயன் படத்தில் இப்படி ஒரு குழப்பமா?!..
Sivakarthikeyan: நடிகர்களை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது ஏதேனும் ஒரு படத்தில் நடித்தாலே போதும் என்கிற மனநிலையில் இருப்பார்கள். ஆனால், அதே நடிகர்கள் நிறைய ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறிவிட்டால் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் அவர்கள் தேர்ந்தெடுக்க துவங்கிவிடுவார்கள். பல இயக்குனர்களை காக்கவும் வைப்பார்கள்.
இதை சினிமாவில் தவிர்க்கவே முடியாது. ஓடும் குதிரையில்தான் பணம் கட்ட முடியும் என்பது சினிமாவுக்கும் பொருந்தும் என்பதால் ஹிட் கொடுக்கும் நடிகர்களை வைத்தே படமெடுக்க தயாரிப்பாளர்களும் ஆசைப்படுவார்கள். இதில்தான் சில இயக்குனர்கள் சிக்கிக் கொள்வார்கள். அவர்களுக்கும் வேறு வழியில்லை.
அப்படித்தான் இப்போது டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, வெங்கட்பிரபு, குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர் ஆகிய மூவரும் சிவகார்த்திகேயனிடம் சிக்கியிருக்கிறார்கள். பராசக்தி, மதராஸி படங்களை முடித்துவிட்டு சிபி சக்ரவர்த்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சிபிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது டேக் ஆப் ஆகவில்லை.
எனவே, குட் நைட் இயக்குனர் வினாயக் சந்திரசேகர் உள்ளே வந்தார். ஆனால், மோகன்லாலின் கால்ஷீட் கிடைக்க இன்னும் 10 மாதம் ஆகும் என்பதால் அது நடக்கவில்லை. ஒருபக்கம், கோட் படத்திற்கு பின் பல மாதங்களாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முயற்சிகள் செய்து வந்தார் வெங்கட் பிரபு. எனவே, வெங்கட்பிரபுவை உள்ளே கொண்டு வந்தார்கள். தலைவன் தலைவி ஆடியோ லான்ச்சில் பேசிய வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதை உறுதி செய்தார்.
ஆனால், இப்போது அதிலும் மாற்றம் நடந்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தியே இயக்கவுள்ளார் என்பதுதான் புது அப்டேட். இதற்கு பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. அயலான் படத்தை வெளியிட பிரச்சனை வந்தபோது ஃபேஷன் ஸ்டுடியோ சுதன் சிவகார்த்திகேயனுக்கு 20 கோடி பணம் கொடுத்து உதவினார். அந்த பணத்தை அவருக்கு கொடுத்தது கோல்ட் மைன் எனும் வினியோக நிறுவனம் வைத்திருக்கும் மணீஷ். தமிழ் படங்களின் ஹிந்தி உரிமைகளை வாங்குவது இவர்தான்.
இவரும், ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும். 13 மாதங்களில் இப்படத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் டீல். அதற்காகத்தான் மணீஷ் 20 கோடி கொடுத்தார். ஆனால், அயலன் படம் வெளியாகி 15 மாதங்கள் ஆகியும் இந்த படம் துவங்கப்படவில்லை. அதோடு, இயக்குனர்களும் மாறிக்கொண்டே இருந்ததால் கடுப்பான மணீஷ், படத்தை உடனே துவங்க வேண்டும். முதலில் பேசியது போல சிபி சக்ரவர்த்திதான் படத்தை இயக்க வேண்டும். இல்லையெனில் நான் கொடுத்த 20 கோடிக்கு வட்டி போட்டு கொடுக்க வேண்டும். அதோடு, சிவகார்த்திகேயனின் எந்த படத்தின் ஹிந்தி உரிமையும் விற்காது என கறாராக சொல்லிவிட்டார்.
எனவே, சிபி சக்வர்த்தியை சமாதானம் செய்து அழைத்து வந்திருக்கிறார்கள். அவரும் தெலுங்கு நடிகர் நானியை வைத்து படமெடுக்க முயற்சி செய்து அது நடக்காத வருத்தத்தில் இருந்தார். இப்போது வெங்கட்பிரபுவை தூக்கிவிட்டு சிபி சக்ரவர்த்திதான் இயக்குனர் என சிவகார்த்திகேயனிடம் சொல்லிவிட்டார்கள். அவரும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.