நல்லா சம்பாதிச்சாரு.. பாவம் எல்லாம் போச்சி!. கங்குவா படத்தால் காலி ஆயிட்டாரு!...
Kanguva: சினிமா என்பது கலை என்றாலும் தயாரிப்பாளருக்கு அது வியாபாரம்தான். தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தால்தான் அடுத்தடுத்து அவர் படங்களை தயாரிப்பார். சினிமாவும் வளரும். அதேசமயம், ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கும் எல்லா படங்களும் அவருக்கு லாபத்தை கொடுக்கும் என சொல்ல முடியாது.
2024ம் வருடம் கோலிவுட்டில் 241 படங்கள் வெளியாகி அதில் 18 படங்கள் மட்டுமே ஹிட் அடித்திருக்கிறது. மொத்தம் 3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இவ்வளவு படங்கள் உருவானதில் 1000 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் சொல்லி இருக்கிறார்கள்.
2024ம் வருடம் அதிக பட்ஜெட்டில் உருவாகி பெரும் நஷ்டத்தை கொடுத்த படம் சூர்யாவின் கங்குவா படம்தான். 300லிருந்து 350 கோடி வரை செலவு செய்து இப்படம் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்க சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
ஹாலிவுட் ஸ்டைலில் இந்த படத்தின் மேக்கிங் அமைந்திருந்தது. 2 வருடங்கள் கழித்து வெளியாகும் சூர்யாவின் படம் என்பதால் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்தார்கள். படம் பல மொழிகளில் ரிலீஸ் எனவும் சொன்னார்கள். இந்த படத்திற்கு அதிக அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது.
புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா படம் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என சொன்னார். ஆனால், படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் படத்தை பற்றி நெகட்டிவாக சொல்ல அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. படத்தின் பட்ஜெட்டில் பாதியை கூட இப்படம் வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த படத்தால் ஞானவேல் ராஜா 100 கோடிக்கும் மேல் கடனாளியாக மாறியிருக்கிறார் என் சொல்லப்படுகிறது. அதேபோல் சூர்யா மற்றும் கார்த்தி படங்களை தமிழகத்தில் சக்தி பிலிம்ஸ் ஃபேக்டரி என்கிற நிறுவனம்தான் வழக்கமாக வினியோகம் செய்யும். ஞானவேல்ராஜா நேரடியாக படத்தை வெளியிட்டாலும் அது சக்தி பிலிம்ஸ் ஃபேக்டரி மூலம்தான் நடக்கும்.
கங்குவா படத்தையும் இந்த நிறுவனமே தமிழகத்தில் வெளியிட்டது. ஆனால், படுமோ படுதோல்வி. எனவே, வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களிடம் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் 40 கோடியை அந்நிறுவனம் திருப்பி கொடுக்க வேண்டியிருக்கிறதாம். ஒருபக்கம், அந்நிறுவனத்துக்கு ஞானவேல் ராஜா 60 கோடியை திருப்பி கொடுக்க வேண்டியிருக்கிறதாம். சக்தி பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் ஒரு வெற்றிகரமான வினியோகஸ்தராக வலம் வந்து கொண்டிருந்தது. பல சின்ன படங்களை வெளியிட்டு லாபம் சம்பாதித்தது. ஆனால், கங்குவா படத்தால் அந்நிறுவனம் கடனாளியாக மாறியிருக்கிறது.
இனிமேல் அந்நிறுவனம் எந்த படத்தை வாங்கி வெளியிட்டாலும் அதில் கிடைக்கும் லாபத்தை வினியோகஸ்தர்கள் அந்நிறுவனத்துக்கு கொடுக்க மாட்டார்கள். எல்லாம் நஷ்டத்தில் கழித்து விடுவார்கள் என்பதால் விழி பிதிங்கி கிடக்கிறது அந்நிறுவனம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.