லோகேஷை ஆடியோ லான்ச்ல பாத்துக்குறேன்!.. ரஜினி சொன்னதன் பின்னணி!
Rajini Lokesh: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்கள் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, புரமோஷன் பணிகளை படக்குழு துவங்கியிருக்கிறது. விரைவில் ஆடியோ லான்ச் நடிக்கவுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினியோடு நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். மேலும், பாலிவுட் நடிகர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
துறைமுகத்தில் நடக்கும் தங்க கடத்தலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையில் ஏற்கனவே 2 பாடல்கள் வெளியான நிலையில் சமீபத்தில் 3வதாக பவர்ஹவுஸ் பாடல் வெளியானது. எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.
லோகேஷ் ஒரு தீவிர கமல் ரசிகர். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘எங்கள் வீட்டில் எல்லோருமே ரஜினி ரசிகர்கள்தான். நானும் சிறுவனாக இருந்தது முதல் ரஜினி ரசிகராகவே இருந்தேன். ஆனால், நான் பார்த்த சத்யா, விருமாண்டி, தேவர் மகன் போன்ற படங்கள் என்னை கமல் ரசிகனாக மாற்றிவிட்டது’ என சொல்லியிருந்தார்.
மேலும் ‘நான் ரஜினி சாரிடம் கூலி கதையை சொன்ன போது நான் கமல் ரசிகன் என அவரிடம் சொல்லிவிட்டேன். அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. கூலி படத்தின் டப்பிங் முடிந்தபின் என் உதவியாளர்களிடம் ‘லோகேஷ் கமல் ரசிகர் என என்னிடம் சொன்னார். அவரை ஆடியோ லான்ச்சில் பார்த்துக்கொள்கிறேன்’ என சிரித்தபடி சொல்லியிருக்கிறார்.
நான் கமல் ரசிகராக இருந்தாலும் ரஜினி சாருக்கு எப்படி காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து பொறுப்பாக இயக்கியுள்ளேன். கவனமாக, பொறுப்புடன் எடுங்கள் என கமல் சாரே என்னிடம் சொன்னார். நான் ரசித்த தளபதி ரஜினியை கூலி படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள்’ என லோகேஷ் சொல்லியிருக்கிறார்.