எனக்கு மனைவின்னா அது சீதா மட்டும்தான்!.. ஃபீல் பண்ணி பேசிட்டாரே பார்த்திபன்!...
Parthiban: பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டவர் பார்த்திபன். இயக்குனராக வேண்டும் என முடிவு செய்து ஒரு கதையை எழுதினார். அந்த கதையில் நடிக்க ரஜினி, கமல் என பலரையும் தொடர்பு கொண்டார். ஆனால், யாரும் நடிக்க முன்வரவில்லை. எனவே, அந்த கதையில் பார்த்திபனே நடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
அப்படி அவர் இயக்கி நடித்த புதிய பாதை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் உருவானபோது படாதபாடு பட்டிருக்கிறார் பார்த்திபன். தயாரிப்பாளரை சிலர் குழப்பிவிட சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்த சொல்லிவிடுவாராம். அதன்பின் பார்த்திபன் அவரை சம்மதிக்க வைத்து படப்பிடிப்பை நடத்துவாராம். இந்த தகவலை பார்த்திபனே சமீபத்தில் ஊடகம் ஒன்றில் சொல்லியிருந்தார்.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களையும் இயக்கி நடித்தார் பார்த்திபன். எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பழக்கமும், திறமையும் உடையவர் பார்த்திபன். படத்தின் தலைப்பு முதல், ரசிகர்களுக்கு ஒரு காட்சியை கடத்துவது முதல் எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கும்.
சினிமா எடுப்பதில் மட்டுமல்ல. மேடைப்பேச்சிலும் கெட்டிக்காரர் இவர். சினிமா விழாவில் பார்த்திபன் கலந்துகொண்டால் அவர் என்ன பேசப்போகிறார் என எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். புதிய பாதை படம் உருவானபோது அந்த படத்தில் நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதலுக்கு சீதாவின் வீட்டில் சம்மதிக்கவில்லை. எனவே, வீட்டை விட்டு வெளியேறியே பார்த்திபனை கைப்பிடித்தார்.
இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் என மூன்று குழந்தைகள் உண்டு. ஆனால், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பல வருடங்களுக்கு முன்பே பிரிந்துவிட்டனர். ஆனால், குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும்போது இருவரும் கலந்து கொண்டு தேவையானவற்றை செய்து வருகிறார்கள். சீதா இப்போது தனியாகவே வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘எங்களின் திருமண முறிவு பற்றி எங்கள் குழந்தைகளிடம் நாங்கள் பேசியதே இல்லை. பொதுவாக திருமண முறிவு நடக்கும்போது ஒருவரை ஒருவர் தவறாக சித்தரித்து குழந்தைகளிடம் சொல்வார்கள். ஆனால், நாங்கள் இருவருமே அதை செய்யவில்லை. சமீபத்தில் சீதாவின் அம்மா தவறிவிடார். எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்தேன். அடுத்தநாள் நன்றி சொல்லி சீதா எனக்கு மெசேஜ் அனுப்பினாங்க. எங்களுக்குள் மன வருத்தம் இருக்கிறதே தவிர மரியாதை, அன்பு எல்லாம் அப்படியேதான் இருக்கு. காதல் வந்து வந்து போகுமே தவிர இந்த மனைவி என்கிற அந்தஸ்தை சீதாவை தவிர வேறு யாருக்கும் நான் இதுவரைக்கும் கொடுத்ததே இல்லை’ என சொல்லியிருக்கிறார்.