காமெடியில் பிளாப்... ரூட்டை மாத்து..! வடிவேலுவுக்கு ஐடியா கொடுக்கும் தயாரிப்பாளர்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வடிவேலு சமீபத்தில் நடித்த கேங்கர்ஸ் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. சுந்தர்.சி.யுடன் இணைந்து வடிவேலு இதற்கு முன் நடித்த நகரம் படம் காமெடியில் அதகளப்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புடன் கேங்கர்ஸ் படத்துக்கு வந்த ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
இதற்கு முன்பும் வடிவேலு படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. கடைசியாக அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்த மாமன்னன் படத்திற்கு வரவேற்பு இருந்தது. அதில் வடிவேலு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து இருந்தார்.
சமீபகாலமாகவே காமெடி நடிகர்கள் எல்லாரும் ஹீரோவாகி வருகின்றனர். சந்தானம், சூரி, யோகிபாபு என சொல்லலாம். வடிவேலுவும் ஹீரோவாக சில படங்களில் நடித்தார். ஆனால் அதில் இம்சை அரசன் 23ம் புலிகேசி மட்டும்தான் எடுபட்டது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன், எலி, தெனாலிராமன் போன்ற படங்கள் ப்ளாப் ஆனது.
விஜயகாந்த் உடன் பிரச்சனை வருவதற்கு முன்பு வரை வடிவேலு பீக்கில் இருந்தார். அவரே பாடவும் செய்வார். அவருக்கு ஒரு ஜோடி இருக்கும். அவ்வளவு மவுசா இருந்த அவருக்கு தொடர்ந்து சறுக்கல். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் தயாரிப்பாளர் ஷங்கர் உடன் லடாய்.
அதன்பிறகு அவருக்கு வந்த சில படவாய்ப்புகளும் நின்று போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த படம்தான் மாமன்னன். அதற்குப் பிறகு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் படு பிளாப் ஆனது. அந்த வகையில் மீண்டம் ரீஎன்ட்ரி கொடுக்கும் நோக்கில் சுந்தர்.சி உடன் கேங்கர்ஸ் நடித்தார். அதுவும் எடுபடவில்லை.
அந்தவகையில் வடிவேலுவின் காமெடி காலம் என்பது நகரம் படத்தோடு முடிந்தது. இனி காமெடி பண்ணினா மக்கள் ஏற்பார்களா என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பதிலைத் தெரிவித்துள்ளார். அது இதுதான்.
வடிவேலு ஒரு சில கதாநாயகர்களோடு இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்தாலும் என்ன காரணத்தாலோ அவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. ஆனால் அதற்கு மாறாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் நடிக்கும்போது மிகப்பெரிய வரவேற்பு அவருக்கு இருக்கு. அதனால குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு அவர் மாறுனா கூட நல்லாருக்கும் என்பது என்னுடைய யோசனை என்கிறார் சித்ரா லட்சுமணன்.