இதுபற்றி கேட்க வேண்டாம்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்!.. ஏர்போர்ட்டில் சீறிய ரஜினிகாந்த்!...
Rajinikanth: ரஜினிக்கு பிடிக்காத அல்லது ஒவ்வாத ஒரு விஷயம் அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்பதுதான். அதற்கு காரணம் அரசியலை அவர் பார்க்கும் பார்வையும், அதில் அவர் சந்தித்த பிரச்சனைகளும்தான். ரஜினி இப்போது அரசியலில் இல்லை என்றாலும் அரசியலோடு எப்போதும் அவரை தொடர்புபடுத்தியே எல்லோரும் பேசுவார்கள்.
அதற்கு காரணம் அரசியலோடும், அரசியல்வாதிகளோடும் ரஜினி வைத்திருக்கும் உறவுதான். அதோடு, அரசியலோடு ரஜினி ஏற்படுத்திக்கொண்ட இணக்குமும் அதற்கு முக்கிய காரணம். 1992ம் வருடம் வரை ரஜினியை யாரும் அரசியலோடு தொடர்புபடுத்தி பேசவில்லை. பாட்ஷா விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து ரஜினி பேசிய பேச்சுதான் அவரை அரசியலுக்குள் இழுத்தது.
அப்போது மட்டும் ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினி முதல்வராகவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ரஜினி அதை செய்யவில்லை. கலைஞர் கருணாநிதியோடு, தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனாரை இணைத்து கூட்டணி வியூகம் செய்து அந்த தேர்தலில் ஜெயலலிதாவை தோற்கடித்தார்.
அரசியல் மீது ரஜினிக்கு எப்போதும் ஒரு தயக்கமும், சந்தேகமும் இருந்தது. இது நமக்கு சரியாக வருமா?.. இதை நம்மால் சரியாக செய்ய முடியுமா?.. என்றெல்லாம் அவர் யோசித்துக்கொண்டே இருந்தார். ஆனால், அவர் நடிக்கும் படங்களில் ‘வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்’ என்றெல்லாம் வசனம் பேசி அவரின் ரசிகர்களை வைப்ரேட் மோடிலேயே வைத்திருந்தார்.
ஒருகட்டத்தில் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆன்மிக அரசியல் செய்யப்போகிறேன் எனவும் அறிவித்தார். ஆனால், திடீரென உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவர்கள் அறிவுரைப்படி என்னால் அரசியலுக்கு வரமுடியாது என சொல்லிவிட்டார். இப்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஒவ்வொருமுறை விமான நிலையம் போகும்போதும் செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்பது வழக்கம். இது ரஜினிக்கு பிடிக்கவில்லை. பலமுறை சிரித்துகொண்டே அவர் சொல்லியும் நிருபர்கள் அதை நிறுத்தவில்லை. தெரியாமல் வாயை விட்டு அடிக்கடி ரஜினி ட்ரோலிலும் சிக்குவார். எனவே, அதை தவிர்க்க வேண்டும் என ரஜினி நினைக்கிறார்.
இந்நிலையில், கூலி படப்பிடிப்பில் கலந்துகொண்டு விமானம் மூலம் சென்னை திரும்பிய ரஜினியிடம் ஒரு நிருபர் அரசியல் தொடர்பான கேள்வியை கேட்க ‘என்னிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நன்றி’ என சொல்லிவிட்டு போய்விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.