தலைவன் தலைவி படத்தோட வெற்றிக்கு இவ்ளோ விஷயம் இருக்கா? யாரெல்லாம் கவனிச்சீங்க?
சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் பற்றித் தான் இப்போது எங்கு பார்த்தாலும் பேச்சு. பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளது படம். அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கு. அதுதான் வெற்றிக்குக் காரணம். வாங்க அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடுவோம்.
குலதெய்வ கோவிலுக்கு மொட்டை அடிக்கப் போறாங்க. அங்க கணவன், மனைவிக்குள்ள சண்டை வருது. இதுக்கு என்ன காரணம்கறதுதான் படம். பிளாஷ்பேக்ல போயிட்டு போயிட்டு வருது. இது ஒரு குடும்ப படம்.
இதுவரைக்கும் கணவன், மனைவி பிரச்சனையை சொல்லக்கூடிய படம்னா அது நகரத்தை மையமா வச்சித்தான் எடுத்துருப்பாங்க. முதன் முறையா பாண்டிராஜ் கிராமிய கதைக்களத்தோட எடுத்துருக்காரு.
படத்துல இன்னொரு சிறப்பு என்னன்னா ஆரம்பத்துல இருந்த யாரு பேரையும் போடல. இதுல நிறைய கதாபாத்திரம் வருது. பாண்டிராஜ் இந்தப் படத்துல ரொம்ப அழகா ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வடிவமைச்சிருக்காரு. விஜய் சேதுபதி ஒரு அப்பட்டமான கதாபாத்திரத்தை அப்படியே செஞ்சிருக்காரு. நித்யாமேனன் படிச்ச கிராமத்துப் பொண்ணு எப்படி இருக்கணுமோ அப்படி அழகா நடிச்சிருக்காங்க. தீபாசங்கர், ஆர்.கே.சுரேஷ், சித்தப்பு சரவணன், காளி வெங்கட், யோகிபாபு என்று ஒவ்வொரு கேரக்டரையும் அழகா செஞ்சிருப்பாரு.
நல்ல திரைக்கதை இருந்தா இசை இரண்டாம்பட்சம்தான்னு நிரூபிச்சிருக்குற படம் இது. புரோட்டா கொடுத்து காதலிக்கிறது வித்தியமாசமா இருக்கு. மனசுக்கு நெருக்கமா இருந்தா ஒரு திரைப்படம் வெற்றி பெறும். ஒரு படம் பார்த்து முடிக்கும்போது நிறைவு வருதுன்னா அது வெற்றிப்படம். அதையும் இந்தப் படம் நிரூபிச்சிருக்கு.
படத்துல நாலைஞ்சு கிளைமேக்ஸ் இருக்கு. கணவன், மனைவிக்குள்ள எவ்வளவு சண்டை இருந்தாலும் அன்பு இருந்தா வேறு எதுவாலயும் பிரிக்க முடியாது என்று நிரூபித்துள்ளது இந்தப் படம். இந்தக் காலகட்டத்துக்கு இந்தப் படம் கண்டிப்பாகத் தேவை. இந்தப் படம் பார்த்த பிறகு கண்டிப்பா விவாகரத்து குறையும். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.