விஜய், சூர்யா பற்றி எல்லாம் நான் ஏன் பேசணும்?.. நிகழ்ச்சியில் கடுப்பான மக்கள் செல்வன்..
விடுதலை 2 திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கடுப்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டு வருகின்றார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த படங்களில் மட்டும் தான் நடிப்பேன், இது போன்ற கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் தன்னுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து அதில் அதிக அளவு ஸ்கோர் செய்பவர் விஜய் சேதுபதி.
ஹீரோவை தாண்டி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார். சமீப நாட்களாக இவருக்கு படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக அளவு வாய்ப்பு வந்தது. இதனால் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு வில்லன் ரோலில் நடிப்பதற்கு நோ சொல்லிவிட்டார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டுமில்லாமல் சைனா வரை சென்று சாதனை மேல் சாதனை படைத்து வருகின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். மேலும் நடிகர் சூரி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
முதல் பாகத்தை காட்டிலும் 2வது பாகம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. படம் வெளியாவதற்கு இன்னும் சிறிது நாட்களில் இருப்பதால் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் சேதுபதி, சூரி ,மஞ்சு வாரியர் ஆகியோர் பல youtube சேனல்களுக்கு சென்று பேட்டி கொடுத்திருந்தார்கள்.
அந்த வகையில் இன்று விஜய் சேதுபதி தெலுங்கில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் சம்பந்தமே இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கில் வெளியான கோட் மற்றும் கங்குவா படம் சரியாக ஓடாததற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி 'முதலில் நான் விடுதலை 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன்காக வந்துள்ளேன்.
எதற்காக இந்த கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து அவர் அதே கேள்வியை திருப்பி திருப்பி கேட்டதால் பதில் அளித்த விஜய் சேதுபதி மக்கள் கொடுக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது என்னுடைய திரைப்படமாக இருந்தாலும் சரி.
ஒரு படத்தை எடுக்கும் போது அப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எடுப்பார்கள். யாரும் தோல்வியடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தில் கோடி கொடியை செலவு செய்து படம் எடுக்க மாட்டார்கள். அது சிறிய படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் ஒன்றுதான். மற்றவர்களின் விமர்சனங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்' என்று அவர் கூறியிருக்கின்றார்.