ரஜினிக்கு எதிரான வசனம்!. வற்புறுத்திய இயக்குனர்!. பேச மறுத்த விஜயகாந்த்!...

By :  Murugan
Update: 2024-12-20 09:56 GMT

vijayakanth

Vijayakanth: ரஜினி, கமலுக்கு பின் சினிமாவில் நுழைந்தாலும் அவர்களுக்கே போட்டி நடிகராக மாறியவர்தான் கேப்டன் விஜயகாந்த். பி.சி செண்டர்களில் கொடி கட்டி பறந்தவர். விஜயகாந்தின் படங்கள் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் அதிக வரவேற்பை பெறும். ஏனெனில் அங்குதான் அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம்.

எம்.ஜி.ஆர் பாணியில் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியவர் இவர். எம்.ஜி.ஆரை போலவே அரசியலிலும் நுழைந்து கலக்கினார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து நிறைய அவமானங்களை சந்தித்து வாய்ப்புகளை தேடி அலைந்து மேலே வந்தவர்தான் விஜயகாந்த்.


உண்மை, நேர்மை, உதவி செய்யும் குணம், இரக்க குணம், வெளிப்படையாக பேசுவது, பொறாமை இல்லாமல் இருப்பது என பல நடிகர்களிடம் இல்லாத பல முக்கிய விஷயங்கள் விஜயகாந்திடம் இருந்தது. சினிமாவில் கூட யாரையும் தாக்கி பேசமாட்டார். அதனால்தான் மக்கள் அவரை கொண்டாடினார்கள். விஜயகாந்த் எப்போதும் தன்னுடைய சீனியர் நடிகர்களை அதிகம் மதிப்பார். அதற்கு உதாரணமாக பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கே.ஆர் ஒரு முக்கிய தகவலை ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

விஜயகாந்தை வைத்து தர்மா படத்தை இயக்கினேன். அந்த படத்தில் ஒரு காட்சியில் வில்லன் மன்சூர் அலிகான் விஜயகாந்திடம் ‘எதையும் யோசிச்சி பேசுறியா?’ என கேட்பார். அதற்கு விஜயகாந்த் ‘நான் எப்பவும் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசனை பண்ணி ஒரு முடிவு எடுப்பேன். அந்த முடிவுல நான் கடைசி வரை நிப்பேன்’ என வசனம் பேச சொன்னேன்.


அப்போது ரஜினியின் பாட்ஷா வந்த நேரம். அந்த படத்தில் ரஜினி பேசும் வசனத்திற்கு நான் சொன்ன வசனம் எதிராக இருப்பதாக சொன்ன விஜயகாந்த் ‘இது வேண்டாம் சார். நான் பேச மாட்டேன்’ என மறுத்தார். ‘அது வேறு இது வேறு. எனக்கும் ரஜினி சார் நல்ல நண்பர்தான். நீங்கள் இப்படி பேசினால் உங்கள் ரசிகர்கள் கை தட்டுவார்கள்.. எனக்கு வசூல் அதிகமாக கிடைக்கும்’ என நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

இதனால் படப்பிடிப்பு 2 மணி நேரம் நடக்கவில்லை. நான் உறுதியாக இருந்ததால் ‘சரி நான் பேசுகிறேன்’ என நடித்து கொடுத்தார் விஜயகாந்த். ஆனால், வசனகர்த்தாவை வைத்து டப்பிங் பேசும்போது ‘ நான் எதையும் நல்லா யோசிச்சிதான் சொல்லுவேன். அப்படி சொன்ன வார்த்தையிலிருந்து மாற மாட்டேன்’ என வேறுமாதிரி பேசிவிட்டார். அது அவரின் நல்ல மனதை காட்டியது. எனவே, நானும் விட்டுவிட்டேன்.

சீனியர் நடிகர்களுக்கு விஜயகாந்த் எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்பதற்கு இது பெரிய உதாரணம். பொதுவாக இது போன்ற வசனங்களை நடிகர்களே வைக்க சொல்வார்கள். ஆனால், விஜயகாந்த் வேற மாதிரி’ என கே.ஆர். பேசியிருந்தார்.

Tags:    

Similar News