ரஜினியை விட அதிக படங்கள்!.. ஒன் மேன் காமெடி நடிகராக கலக்கும் யோகிபாபு!...
Yogibau: கோலிவுட்டில் இப்போது யோகிபாபுவை தவிர வேறு காமெடி நடிகர் இல்லை. வடிவேலு இப்போது செய்யும் காமெடிகள் ரசிக்கும்படி இல்லை. அவரின் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் படம் கூட ஓடவில்லை. எனவே, மாமன்னன், மாரீசன் என வித்தியாசமான சீரியஸான வேடங்களில் நடிக்க துவங்கிவிட்டார். கவுண்டமணிக்கோ வயதாகிவிட்டது. கவுண்டமணி இல்லாமல் செந்திலும் இல்லை.
நடிகர் விவேக் மறைந்துவிட்டார். நடிகர் சந்தானமும், சூரியும் இனிமேல் ஹீரோதான் என முடிவெடுத்து பயணித்து வருகிறார்கள். எனவே, கோலிவுட்டில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. எனவே, பல படங்களிலும் யோகிபாபுவே நடித்து வருகிறார். ஆனால், எல்லா படங்களிலும் யோகிபாபு ரசிகர்களை சிரிக்க வைப்பதில்லை. அவரின் நடிப்பில் வெளியாகும் சில படங்கள் மட்டுமே ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ஆனால், அவரை விட்டால் வேறு யாருமில்லை என்பதே தமிழ் சினிமாவின் நிலையாக இருக்கிறது. இன்று அவருக்கு பிறந்தநாள். எனவே, அவரை பற்றிய சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.
யோகிபாபு சினிமாவுக்கு வருவதற்கு முன் கிரிக்கெட்டில் மாநில சேம்பியன் என்பது பலருக்கும் தெரியாது. அதேபோல், ஃபுட்பாலும் நன்றாக விளையாடுவார். கிரிக்கெட்டை பொறுத்தவரை கிளைமேக்ஸில் எண்ட்ரி ஸ்பெஷலிஸ்ட் என நண்பர்கள் அழைப்பார்கள்.
சினிமாவில் எப்படியாவது நுழைந்து இயக்குனராக வேண்டும் என்பதே யோகிபாபுவின் ஆசையாக இருந்தது. விஜய் டிவியில் அப்போது பிரபலமாக இருந்த லொள்ளு சபா நிகழ்ச்சியை ராம் பாலா இயக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் உதவி இயக்குனராக சில எபிசோட்களில் வேலை செய்தார். ஆனால், அவரை நடிகராக பார்த்தார் ராம் பாலா. லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக நிற்க வைத்தார்.
இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமான யோகி படத்தில் நடித்ததால் யோகி பாபு என எல்லோரும் அழைக்க துவங்கினார்கள். இப்போது அதுவே நிரந்தரமாகிவிட்டது. யோகி பாபுவுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளை கொடுத்து தூக்கிவிட்டது சுந்தர்.சி. எனவே, அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறார் பாபு. சுந்தர்.சிக்கு அடுத்து யோகி பாபுவை முன்னணி காமெடி நடிகராக மாற்றியது இயக்குனர் நெல்சன்.
அவர் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் வேடத்தை கொடுத்ததோடு அனிருத் குரலில் ஒரு பாடலும் கொடுத்தார். இந்த படம் யோகி பாபுவை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அதன்பின் இப்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.பல படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் மண்டேலா இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார். இப்போதும் ஜெயிலர் 2-வில் நடித்து வருகிறார்.
ஒரு வருடத்திற்கு இவரின் நடிப்பில் சுமார் 20 படங்கள் வெளியாகிறது. ரஜினியை விட அதிக படங்களில் நடித்துவிட்டார். அந்த எண்ணிக்கை 220ஐ தாண்டுகிறது. ஒரு படத்திற்கு சில கோடிகள் அல்லது ஒரு நாளைக்கு 12 லட்சம் என சம்பளம் வாங்குகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
யோகி பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!...