நீ பிச்சைதான் எடுப்ப!... சரவனணிடம் சொன்ன டி.ராஜேந்தர்!.. ஒரு பிளாஷ்பேக்!...
Actor Saravanan: 90களிலேயே சினிமாவில் நடிக்க வந்தவர் சரவணன். பார்ப்பதற்கு விஜயகாந்த் போல இருந்தாலும் இவர் தீவிர ரஜினி ரசிகர். இவரின் சொந்த ஊரான சேலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். துவக்கத்தில் இவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இவர் நடிப்பில் வெளிவந்த பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, சூரியன் சந்திரன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றியடைந்தது. எனவே, முன்னணி நடிகராக சரவணன் மாறினார். ரசிகர்கள் இவரை சேலம் சரவணன் என அழைத்தார்கள். பல படங்களிலும் ஹீரோவாக நடித்து வந்த சரவணன் பணம் வருகிறதே என ஆசைப்பட்டு கிடைத்த எல்லா வாய்ப்புகளிலும் நடித்தார்.
இதன் காரணமாக தொடர் தோல்விகளை சந்தித்து ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பே இல்லாத நடிகராக மாறினார். சில வருடங்கள் கழித்து இயக்குனர் பாலா இவரை தனது நந்தா படத்தில் நடிக்க வைத்தபோது சரவணனுக்கு செகண்ட் இன்னிங்ஸ் துவங்கியது. அதன்பின் அமீரின் இயக்கத்தில் உருவான பருத்தி வீரன் படத்தில் சித்தப்புவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பின் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், கிளிக் ஆகவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார். அதில் அரண்மனை, கடைக்குட்டி சிங்கம், கோலமாவு கோகிலா, ஜெயிலர், ராயன் போன்ற படங்களில் சரவணன் ஏற்ற வேடம் அவருடைய மார்க்கெட்டை தக்க வைத்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய டி.ராஜேந்தர் ‘நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் டி.ராஜேந்தர் என்னை பார்த்து ‘உச்சனை உச்சம் பார்த்தால் பிச்சை எடுப்பாய். நீ பிச்சை எடுக்க போறாடா’ என்று சொன்னார். ‘என்ன இப்படி சொல்றீங்க.. எனக்கு கையில் 13 படங்கள் இருக்கு’ என சொன்னேன். ‘எல்லா படமும் இருக்கும். ஆனா ஒருத்தன் கூட வரமாட்டான்’ என சொன்னார். அப்போது அவர் சொந்தமாக தயாரித்த பெற்றெடுத்த பிள்ளை படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அவர் சொல்லி 3 வருடங்களில், அதாவது என் 29வது வயதில் எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்துட்டேன். 40 வயதில் நீ நல்லா இருப்பன்னு சொன்னார். அவர் சொன்னது போலவே 40வது வயதில் பருத்திவீரன் வெளியானது’ என சரவணன் சொல்லியிருக்கிறார்.
டி.ராஜேந்தரை நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பளராகவே பலருக்கும் தெரியும். ஆனால், நன்றாக ஜோசியம் பார்ப்பார் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்..