Flash back: நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாடல் உருவானது இப்படித்தானா? கங்கை அமரன் சொன்ன சுவாரசிய தகவல்
hநடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், கதாசிரியர், இசை அமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முக திறன்களைக் கொண்டவர் கங்கை அமரன். இவர்தான் விஜயகாந்தின் சூப்பர்ஹிட் பாடலான நீ பொட்டு வச்ச தங்கக்குடம் பாடலை எழுதினார். இந்த அனுபவம் எப்படி இருந்தது? பாடல் உருவானது எப்படின்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கங்கை அமரன் பகிர்ந்து கொள்கிறார். வாங்க பார்க்கலாம்.
எனக்கு சொன்ன சிச்சுவேஷன். வந்த வார்த்தை தான். ஹீரோவுக்கு எழுதும்போது நல்ல வார்த்தையா வரணும்னு சொல்லிருக்காங்க. பொன்மனச்செல்வன் விஜயகாந்த் படம். அப்ப எழுதுன ஒரே பல்லவி இதுதான். 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம். ஊருக்கு நீ மகுடம். நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம்... நீ தங்கக் கட்டி வெல்லக்கட்டி... உன் பேரைச் சொன்னா பட்டி தொட்டி'ன்னு எழுதுனேன்.
அப்போவே அந்த சாங் பாப்புலர்தான். அவரு இல்லாமப் போனதும் இந்தப் பாட்டு எவ்வளவு மகுடமா இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. அவரு இருக்கும்போது இருந்ததை விட இப்போ 10 மடங்கு அதிகமா வரவேற்பு இருக்கு. ஒரு படத்துல ஹீரோ வர்றாருன்னா இந்தப் பாட்டைப் போட்டு விட்டுர்றாங்க. மறுபடியும் இந்தப் பாட்டு வருதுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்கிறார் இயக்குனர் கங்கை அமரன்.
1989ல் பி.வாசு இயக்கிய விஜயகாந்தின் சூப்பர்ஹிட் படம் பொன்மனச்செல்வன். விஜயகாந்த், ஷோபனா, வித்யாஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவி;ன இசையில் பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் ரகங்கள். அடிச்சேன், கானக் கருங்குயிலே, பூவான, இனிமேலும், நீ பொட்டு வச்ச, தோப்பிலே இருந்தாலும் ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் இன்று வரை அழியா புகழுடன் நிலைத்து நிற்கும் பாடல் நீ பொட்டு வச்ச தங்கக்குடம் தான்.