விஜய் நிராகரித்த கதையா?!.. சூர்யாவுக்கு என்னாச்சி?!.. கருப்பு கை கொடுக்குமா?!..

By :  MURUGAN
Published On 2025-07-23 10:30 IST   |   Updated On 2025-07-23 10:30:00 IST

Karuppu: சினிமாவில் ஒரு நடிகர் நடிக்க ஆசைப்பட்டு ஆனால் அவரால் நடிக்க முடியாத கதையில் வேறொரு நடிகர் நடிப்பது என்பது சாதாரண ஒன்றுதான். ஷங்கர் கமலை வைத்து ரோபோ எடுக்க ஆசைப்பட்டார். அது நடக்காமல் போகவே பல வருடங்கள் கழித்து அதே கதையை ரஜினியை வைத்து எந்திரன் என எடுத்தார்.

சினிமா உலகை பொறுத்தவரை விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு போன கதை அவர்களால் நடிக்க முடியாமல் போய் அதில் சூர்யா நடித்திருக்கிறார். அது அவருக்கு வெற்றிப்படங்களாகவும் அமைந்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்துக்கு சொன்ன கதைதான் கஜினி. அஜித் சில மாதங்கள் காத்திருக்க சொன்னார். ஆனால், அவரோ சூர்யாவிடம் அந்த கதையை சொல்லி கஜினி படத்தை எடுத்தார்.


அந்த கோபத்தில்தான் கடந்த 20 வருடங்களாக அஜித் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதே இல்லை. அதேபோல், விக்ரமன் இயக்கத்தில் விஜய் சில நாட்கள் நடித்த படம்தான் உன்னை நினைத்து. ஆனால், கதை பிடிக்காமல் விஜய் வெளியேறிவிட சூர்யா நடித்து அப்படம் வெளியானது. இந்த படம்தான் தன்னை பெண்களிடம் கொண்டு சேர்த்தது என சூர்யாவே சொல்லியிருக்கிறார்.

அதேபோல், பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்த சூர்யா அதிலிருந்து வெளியேற அவருக்கு பதில் அருண் விஜய் நடித்து அப்படம் வெளியானது. இந்நிலையில்தான், ஒரு புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. கருப்பு படத்தின் கதையை ஆர்.ஜே.பாலாஜி முதலில் விஜயிடம்தான் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த கதை தனக்கு செட் ஆகாது என விஜய் சொல்லிவிட்டார்.


அதன்பின்னரே இந்த கதையை சூர்யாவிடம் சொல்லி இப்போது கருப்பு படமாக உருவாகியிருக்கிறது. சூர்யா நிறைய கதைகளை நிராகரித்தவர். ஆனால், விஜய் நிராகரித்த கதையில் நடிக்க அவர் எப்படி ஒப்புக்கொண்டார் என்பது தெரியவில்லை. கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் டீசர் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

Tags:    

Similar News