செந்தாமரையின் திருமணம் இப்படியா நடந்தது? அண்ணா செய்த மேஜிக்
செந்தாமரை:
ரஜினி நடித்த பொல்லாதவன், கழுகு, மூன்று முகம் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் செந்தாமரை. காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் பல நாடக மேடைகளில் தோன்றி ஏகப்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் போலீஸ் அதிகாரியாகவும் ரவுடியாகவும் முரட்டுத்தனமான கேரக்டர்களிலும் நடித்து அசத்தியவர் செந்தாமரை. முதல் முதலில் 1957 ஆம் ஆண்டு வெளியான மாயா பஜார் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் செந்தாமரை.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன் என பல நடிகர்களின் படங்களில் துணை நடிகராகவும் வில்லன் நடிகராகவும் நடித்து அதன் பிறகு ரஜினிகாந்த நடித்த பெரும்பாலான படங்களில் ஒரு மிரட்டல் வில்லனாக நடித்து மிகப்பெரிய புகழை அடைந்தார். அதிலும் மூன்று முகம் படத்தில் ஏகாம்பரம் என்ற கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. செந்தாமரை என்று சொன்னாலே இந்த ஏகாம்பரம் கதாபாத்திரம் தான் நம் ஞாபகத்திற்கு வரும். எம்ஜிஆர் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார் செந்தாமரை.
இரண்டு மனைவிகள்:
இந்த நிலையில் செந்தாமரைக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் அப்படி என்ன நட்பு என்பதை பற்றி அவருடைய மகள் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். செந்தாமரைக்கு இரண்டு மனைவிகளாம். அதில் முதல் மனைவி செந்தாமரையின் அத்தை மகள். ஆரம்பத்தில் திருமணம் செய்வதற்கு முன்பு அறிஞர் அண்ணா செந்தாமரையிடம் வயதாகிக் கொண்டே போகிறது. எப்பொழுது திருமணம் செய்ய போகிறாய் என கேட்டிருக்கிறார்.
அதற்கு செந்தாமரை எனது அத்தை மகளைத்தான் திருமணம் செய்ய போகிறேன் எனக் கூற சரி ஒருநாள் வீட்டிற்கு அழைத்து வா எனக்கு சொன்னாராம். அவர் சொன்னதை போல தன்னுடைய அத்தை மகளை வீட்டுக்கு வரவழைத்து இருக்கிறார் செந்தாமரை. உடனே அறிஞர் அண்ணா அவர் வீட்டிலேயே செந்தாமரைக்கும் அவருடைய அத்தை மகளுக்கும் திருமணம் செய்து வைத்தாராம். அப்போது அறிஞர் அண்ணா தன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தெரியாமல் செந்தாமரைக்கு ஒரு வெள்ளி டம்ளரை பரிசாக கொடுத்து மறைமுகமாக வைத்துக் கொள் என சொல்லி அனுப்பினாராம்.
எம்ஜிஆருக்கு அனுப்பப்பட்ட கடிதம்:
அதுமட்டுமல்ல செந்தாமரைக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை அறிந்த அறிஞர் அண்ணா ஒரு கடிதம் எழுதி இதை எம்ஜிஆர் நாடக ட்ரூப்பில் கொண்டு போய் கொடு, உனக்கு அங்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என சொல்லி அந்த கடிதத்தை கொடுத்து அனுப்பி இருக்கிறார். அதிலிருந்து எம்ஜிஆர் குரூப்பில் தான் செந்தாமரை நடித்து வந்தாராம் .கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்திருக்கிறார் செந்தாமரை.
அப்போது கலைஞர் கருணாநிதியை வைத்து எம்.ஜி.ஆருக்கும் செந்தாமரைக்கும் ஏதோ வாய் தகறாரு ஏற்பட அந்த குரூப்பில் இருந்து வெளியே வந்தாராம் செந்தாமரை. அங்கிருந்து வந்து சிவாஜி நாடக குரூப்பில் தன்னை இணைத்துக் கொண்டாராம். கருணாநிதியை பற்றி யார் என்ன சொன்னாலும் அதை இவரால் தாங்கிக் கொள்ளவே முடியாதாம். தன் மீது இந்த அளவு பற்றுக் கொண்ட செந்தாமரைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கருணாநிதியும் திரைப்படக் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு கொடுத்தும் அதை வேண்டாம் என மறுத்திருக்கிறார் செந்தாமரை.
மேலும் கருணாநிதி செந்தாமரை மீது கொண்ட அன்பின் காரணமாக தன்னுடைய பேத்திக்கு செந்தாமரை என்றுதான் பெயர் வைத்திருக்கிறாராம். இதை செந்தாமரையின் மகள் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.