மணிவண்ணனுக்காக தான் இசை அமைக்காவிட்டாலும் இளையராஜா கொடுத்த ஒரு பாடல்... படம் சூப்பர்ஹிட்!
80 மற்றும் 90களில் தமிழ் சினிமா முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தது இளையராஜாவின் இன்னிசை தான். அதற்கு காரணம் அவரது மனதை மயக்கும் இசை தான். அதனால் தான் ராகதேவன், இசைஞானி என்றெல்லாம் போற்றப்பட்டார்.
சில இயக்குனர்கள் இளையராஜாவின் கால்ஷீட் கிடைத்தால் தான் படமே இயக்குவார்கள். அவருக்காக எவ்வளவு காலம் ஆனாலும் காத்திருப்பார்கள். அப்படி ஒருவர்தான் இயக்குனர் மணிவண்ணன். இவருடன் இளையராஜா இணைந்து விட்டால் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும். குறிப்பாக பாடல்கள் அருமையாக இருக்கும். அப்படி பல படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.
ஆனால் அவருடைய ஒரு படத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் இளையராஜாவால் இசை அமைக்க முடியவில்லை. அதற்காக மணிவண்ணன் அவரது சகோதரரான கங்கை அமரனை ஒப்பந்தம் செய்தார். இருந்தாலும் மணிவண்ணனுக்காக அந்தப் படத்தில் இளையராஜா ஒரே ஒரு பாடலைப் போட்டுக் கொடுத்தார்.
அது என்ன படம் என்று தானே கேட்கிறீர்கள். சின்னத்தம்பி பெரிய தம்பி. பிரபுவும், சத்யராஜூம் இணைந்து நடித்த படம். இந்தப் படத்தை இயக்கியவர் மணிவண்ணன். இளையராஜாவின் கால்ஷீட் கிடைக்காமல் கங்கை அமரன் இசை அமைத்தார். இந்தப் படத்தில் இளையராஜா போட்டுக்கொடுத்த அந்த ஒரே ஒரு பாடல் இதுதான்.
'ஒரு காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது' என்ற இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. இப்போது கேட்டாலும் மனதைக் கிறங்கடிக்கும் ரகமான பாடல் இது. இந்தப் படமும், இளையராஜா, மணிவண்ணன் காம்பினேஷன் என்று பேசப்பட்டு இமாலய வெற்றியைப் பெற்றது.
மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, 24 மணி நேரம், ஜனவரி 1, கூலி, ஜல்லிக்கட்டு, பாலைவன ரோஜாக்கள், இனி ஒரு சுதந்திரம், புது மனிதன், அமைதிப்படை உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் இளையராஜாவின் இசை இல்லாமல் இல்லை.
இவற்றில் ஒன்று தான் சின்னத்தம்பி பெரிய தம்பி. இது 1987ல் வெளியானது. சத்யராஜ், பிரபுவுடன் நதியா, நிழல்கள் ரவி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சின்னத்தம்பி பெரிய தம்பி, என் பாட்ட கேட்டா, மாமன் பொண்ணுக்கு, மழையின் துளியிலே, ஒரு ஆல மரத்துல, ஒரு காதல், யா யா ஆகிய பாடல்கள் உள்ளன.