விஜயகாந்துக்காக வேற ரூட்டில் ஆபிஸ் போன முதலமைச்சர்!.. செம பிளாஷ்பேக்!..
Vijayakanth: பள்ளிக்கு சரியாக போகாததால் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துகொண்டிருந்தவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே, நண்பர் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார் விஜய ராஜா. அவருக்கோ யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் பிரபலமான ஹீரோவாக இருந்ததால் தனது பெயரை விஜயகாந்த் என வைத்துக்கொண்டார். ‘அதான் ஒரு காந்த் இருக்காரே இன்னொரு காந்த் எதுக்கு?’ என வாய்ப்பு தேடி போன இடங்களில் நக்கலடித்தார்கள்.
பல அவமானங்களை சினிமாவில் நடிக்க துவங்கி வெற்றிப்படங்களை கொடுத்து எல்லோராலும் கவனிக்கப்படும் ஹீரோவாக மாறினார் விஜயகாந்த். அதன்பின் அவரின் அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது முன்னணி நடிகர்களாக கலக்கி வந்த ரஜினி, கமல் ஆகியோருக்கே டப் கொடுத்தார்.
அரசியலில் ஈடுபாடு கொண்ட விஜயகாந்த் கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கி பழகி வந்தார். எப்போது நினைத்தாலும் கலைஞருடன் தொலைப்பேசியில் பேசவும், நேரில் சந்திக்கவும் விஜயகாந்த்தால் முடிந்தது. கலைஞரை அடிக்கடி சந்தித்து பேசியும் வந்தார் விஜயகாந்த். கலைஞரும் விஜயகாந்த் மீது அன்பு கொண்டவராகவே கலைஞர் இருந்தார்.
ஆனால், அரசியல் இவர்களுக்கு இடையே விரிசலை உண்டாக்கியது. தனிக்கட்சி துவங்கிய பின் திமுகவின் எதிரியாக மாறினார் விஜயகாந்த். பாலம் வருவதாக சொல்லி விஜயகாந்தின் திருமண மண்டபத்தையே இடித்தார்கள். எனவே, கலைஞரை கடுமையாக விமர்சிக்க துவங்கினார் விஜயகாந்த். அப்படி இருந்தாலும் கலைஞர் மரணமடைந்த செய்தி கேட்டு வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போதும் அழுதுகொண்டே வீடியோ போட்டார் விஜயகாந்த். அதோடு, சென்னை வந்ததும் நடக்க முடியாத நிலையிலும் கலைஞரின் சமாதிக்கு போய் அழுதார். தற்போது விஜயகாந்தும் நம்முடன் இல்லை.
இந்நிலையில், விஜயகாந்தை வைத்து வல்லரசு படம் எடுத்த இயக்குனர் மகராஜன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘வல்லரசு படத்தின் முக்கிய காட்சியை காலை 7 மணிக்கு துவங்கி 11 மணிக்குள் மவுண்ட் ரோட்டில் பீச் அருகே படமாக்க திட்டமிட்டோம். பல பஸ்களை நிறுத்தி போராட்டம் நடத்துவது போன்ற காட்சி அது. ஆனால், வண்டியெல்லாம் வந்து நிற்கவே 11 மணி ஆகிவிட்டது. எப்படியும் 2 மணி வரை நேரம் தேவைப்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஏனெனில் முதல்வர் அந்த வழியாகவே கோட்டைக்கு செல்லும் நேரம் அது. இதை நான் விஜயகாந்திடம் சொன்னவுடன் உடனே கலைஞரின் உதவியாளரிடம் பேசினார். சிறிது நேரத்தில் கலைஞரே பேசினார், விஜயகாந்த் விஷயத்தை சொல்ல கலைஞரோ ‘ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் வேற ரூட்டில் கோட்டைக்கு போகிறேன்’ என சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு விஜயகாந்துக்கு செல்வாக்கு இருந்தது’ என அவர் பேசியிருக்கிறார்.