கமலுக்கு கூடிய கூட்டம்!.. ராமாபுரம் தோட்டத்துக்கு வரச் சொன்ன எம்.ஜி.ஆர்.. ஒரு செம பிளாஷ்பேக்!...
Kamalhaasan: 4 வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார் கமல். அதே வயதில் எம்.ஜி.ஆரின் மகனாக ஆனந்த ஜோதி படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு கமல் மீது எப்போதும் அன்பு உண்டு. 80களில் கமலின் படங்களை பார்த்துவிட்டு தேவையான நேரத்தில் தேவையான அறிவுரைகளை சொன்னவர் எம்.ஜி.ஆர்.தான்.
எம்.ஜி.ஆர் பட கதை: எம்.ஜி.ஆரின் பெரிய இடத்து பெண் படத்தின் கதையை சுட்டுதான் சகலகலா வல்லவன் படத்தை எடுத்திருப்பார்கள். இந்த படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் கமலிடம் ‘இதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேனே. நீயும் ஏன் அதையே செய்கிறாய்?. புதிதாக எதாவது செய்’ என சொல்லி கமலின் மனதிற்குள் விதையை போட்டார்.
80களில் வந்த சில படங்களை பார்த்துவிட்டு கமலின் நடிப்பை பாராட்டியும் இருக்கிறார் எம்.ஜி.ஆர். அதோடு, கமலை அடிக்கடி ராமாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து பேசிக்கொண்டும் இருப்பாராம். முதல்வராக இருக்கும்போது நேரம் ஒதுக்கி கமலின் படங்களை பார்க்கும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது.
பதினாறு வயதினிலே: பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த பதினாறு வயதினிலே படத்தை பார்த்துவிட்டு ‘இனிமேல் என் படங்களெல்லாம் ஓடாது’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர். அதுதான் அவரின் பெருந்தன்மை. காக்கி சட்டை படம் வெளியான நேரம் கமல் கோவை சென்றிருந்தபோது அவரை காண மக்கள் கூட்டம் கூடிவிட்டது.
கமலுக்கு கூடிய கூட்டம்: இந்த தகவல் உளவுத்துறை மூலம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டபோது ‘உங்களுக்கு கூடும் கூட்டம் போல் கமலுக்கும் கூடுகிறது’ என சொல்லிவிட்டார்கள். உடனே கமலை ராமாபுரம் தோட்டத்திற்கு வர சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர். கமல் அங்கு போனதும் ‘உனக்கு எதாவது அரசியல் ஆசை இருக்கிறதா?. நான் எதாவது உதவி செய்ய வேண்டுமா?’ என கேட்டிருக்கிறார். அதாவது ‘அதிமுகவில் நீ சேர்ந்துவிடு’ என்பதை மறைமுகமாக கேட்டிருக்கிறார்.
ஆனால், ‘என்னால் கேமராவுக்கு முன்பு மட்டுமே நடிக்க முடியும். பின்னால் நடிக்க முடியாது. எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை’ என அவரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். ஆனால், அதே கமல்தான் பின்னாளில் காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை முடித்து வந்த போது கமலை அழைத்தார். கமல் தனது மகள் ஸ்ருதியுடன் அங்கு போனபோது தனது மனைவி ஜானகியின் நகைகளை எடுத்து வந்து ‘இதில் உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள். உன் மகளுக்கு போடு’ என சொல்லி கமலை நெகிழவைத்தார். அது நடந்து சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார்.