ஒரு சிகரெட் கிடைக்குமா?!.. ரஜினி - மகேந்திரன் இடையே நடந்த வித்தியாசமான முதல் சந்திப்பு!
Rajinikanth: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருந்தவர் மகேந்திரன். மசாலா, காதல், செண்டிமெண்ட், நட்பு என ஒரே ஃபார்முலாவில் சினிமா உலகம் பயணித்துக்கொண்டிருந்த போது இயல்பான கதை, யதார்த்தமான நடிப்பு என தமிழ் சினிமாவை வேறு பாதையில் பயணிக்க வைத்தவர் மகேந்திரன்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் தமிழ் சினிமாவின் போக்கையும், படமெடுக்கும் ஸ்டைலையும் கடுமையாக விமர்சித்தவர்தான் மகேந்திரன். கல்லூரி மாணவனாக இருக்கும்போது எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட ஒரு விழாவிலேயே தமிழ் சினிமாவை பங்கம் செய்து எம்.ஜி.ஆரின் பாராட்டையும் பெற்றார்.
நாடகத்தனமான சினிமா மகேந்திரனுக்கு பிடிக்காது. சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்திற்கு கதை, வசனம் எழுதியது மகேந்திரன்தான், ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறினார். இவர் இயக்கிய முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் போன்றவை இப்போதும் தமிழில் சிறந்த திரைப்படங்களாக இருக்கிறது.
ரஜினியை வைத்து மசாலா படங்களை மட்டுமே மற்ற இயக்குனர்கள் கொடுத்தபோது அவருக்குள் இருந்த ஒரு மிகச்சிறந்த நடிகனை கண்டுபிடித்தது மகேந்திரன்தான். தான் நடித்ததில் தனக்கு மிகவும் பிடித்த படம் முள்ளும் மலரும், பிடித்த இயக்குனர் மகேந்திரன் என ரஜினியே சொல்லி இருக்கிறார்.
ரஜினியும், மகேந்திரனும் முதன் முதலில் சந்தித்தது எப்படி என பார்ப்போம். ரஜினி - கமல் நடித்த ஆடு புலி ஆட்டம் படத்திற்கு கதை, வசனம் எழுதியது மகேந்திரன்தான். அப்போது ஒரு அறையில் அமர்ந்து சிகரெட் குடித்துக்கொண்டே வசனங்களை சரி செய்து கொண்டிருந்தார் மகேந்திரன். அப்போது சிகரெட் தீர்ந்துவிட்டது. உடனே யாரையாவது வாங்கி வர சொல்லலாம் என வெளியே வந்தால் அங்கு யாரும் இல்லை.
அப்போதுதான் பக்கத்து அருகில் இருந்து சிகரெட் புகை வந்தது. உடனே அங்கு போனார் மகேந்திரன், அங்கே இருந்தவர் ரஜினி. தன்னை அறிமுகம் செய்து கொண்ட மகேந்திரன் ‘ஒரு சிகரெட் கிடைக்குமா?’ என ரஜினியிடம் கேட்க அப்படித்தான் இருவருக்கும் நட்பு துவங்கியிருக்கிறது. அப்போது சென்னையில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார் ரஜினி.
அந்த அறையில் இரவு முழுவதும் ரஜினியும், மகேந்திரனும் சினிமாவை பற்றி பேசுவார்களாம். அப்போது நல்ல சினிமா மீது ரஜினிக்கும் ஆர்வத்தை மகேந்திரன் புரிந்துகொண்டார். அவர் முதன் முதலாக இயக்கிய முள்ளும் மலரும் படத்தில் காளி வேடத்தில் ரஜினிதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ரஜினிக்கும் அவர் சொன்ன கதை பிடித்துப்போக அப்படத்தில் நடிக்க சம்மதித்தார். ரஜினி நடித்த சிறந்த படங்களில் முள்ளும் மலரும் படத்திற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.
Also Read: ரஜினி அடிக்கடி பார்க்கும் 3 திரைப்படங்கள் இதுதானாம்!.. அட இது அவரே சொன்னது!..