தாய்க்குலங்களின் நெஞ்சில் குடியேறிய நடிகர் ராஜ்கிரண் !
தாய்க்குலங்களின் நெஞ்சில் குடியேறிய நடிகர் ராஜ்கிரண் !
;ராஜ்கிரண் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது என் ராசாவின் மனசிலே படத்தில் கோவில் திருவிழாவில் அவர் கடிக்கும் நல்லி எலும்புத் துண்டு. மனிதர் சாப்பிடும் ரகமே தனிதான். நமக்கு வயிறு பசி எடுத்து விடும். அந்த அளவு ரசித்து ருசித்து வாய் நிறைய அதைத் தான் வாயாற வயிறாற சாப்பிடுவது என்பார்கள்.
கை நிறைய அள்ளி வாய் நிறைய வைத்து சாப்பிடும் அழகோ அழகு தான். பழைய படங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இப்படித்தான் சாப்பிடுவார். அதுதான் உழைப்பாளிகளின் சாப்பாடு. வயலில் இறங்கி பாடுபட்டு உழைப்பவர்களின் சாப்பாடு. அது சரி...இப்போது ராஜ்கிரண் பற்றி சுவாரசியமான சில விஷயங்களைப் பார்ப்போம்.
நடிகர் ராஜ்கிரண் படங்கள் என்றாலே தாய்க்குலங்;களுக்குப் பிடித்தமானவையாகத் தான் இருக்கும். மனிதர் பாசம், சென்டிமென்ட், கதையோட்டம் என அனைத்திலும் வெளுத்து வாங்குவார். இவருக்கு ஏற்ற ஜோடி இசை ஞானி இளையராஜாதான். பாடல்களை அற்புதமாக போட்டுக் கொடுப்பார். தாயைப் பற்றி ராஜ்கிரணுக்காக இவர் பாடிய பாடல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது. தன் வயிறைப் பட்டினி போட்டு என்னுயிரை வளர்த்தவளே என்று அந்தப்பாடலில் உள்வரிகள் வரும்...என்ன ஒரு பாடல்..!
தாயைப் பற்றி இதைவிட எளிமையாக வேறு யாரும் சொல்லி இருக்க முடியாது. என் தாயென்னும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே என்று அந்தப்பாடல் ஆரம்பிக்கும்...இளையராஜாவின் வெண்கலக்குரலில் பாடல் படம் பார்க்கும்போது 5 நிமிடத்திற்குள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடும். இந்த அற்புதமான பாடல் இடம்பெற்ற படம் அரண்மனைக்கிளி.
ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமகம் செய்தவர். வைகைப்புயல் வடிவேலுவை இவர் தான் அறிமுகப்படுத்தினார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்ட இவரது இயற்பெயர் காதர். 26.8.1954ல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தார். தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்ததில் என்னைப்பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், பாண்டவர் பூமி, நந்தா, சண்டக்கோழி, மஞ்சப்பை, கொம்பன் என பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
3 தமிழக அரசின் விருதுகளும், 1 பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார். நந்தா, பாண்டவர் பூமி, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் விருதுகள் கிடைத்தன. அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களை தயாரித்து, இயக்கி அபார வெற்றி கண்டார். ராசாவே உன்னை நம்பி என்ற படத்தைத் தயாரித்துள்ளார். என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே ஆகிய படங்களையும் சொந்தமாக தயாரித்தார்.
எதார்த்தமான இவரது நடிப்பில் உருவான ஒரு சில படங்களை இங்கு காணலாம்.
என்ன பெத்தராசா
1989ல் ராஜ்கிரண் தயாரிப்பில் சிராஜ் இயக்கத்தில் உருவான படம். ராமராஜன், ரூபினி, சீனிவாசன், காஜா ஷெரீப், இளவரசன், கவுண்டமணி, செந்தில், ராஜ்கிரண், வினுசக்கரவர்த்தி, சாதனா, ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இசை அமைத்தவர் இளையராஜா. சொந்தம் ஒன்றை, ஆசை வச்ச பேரையெல்லாம், மல்லிகை பூ காதலிலே, எல்லோருக்கும் நல்லவனா, ஆம்பளயா லெட்சணமா, பெத்த மனசு ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இப்போது கேட்டாலும் நெஞ்சைத் தாலாட்டும்.
என் ராசாவின் மனசிலே
1991ல் ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கிய படம். ராஜ்கிரண், மீனா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற் பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்து பட்டையைக் கிளப்பினார். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. குயில் பாட்டு, பாரி ஜாத பூவே, பெண் மனசு ஆழம் என்று, போடா போடா புண்ணாக்கு, சோலை பசுங்கிளியே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெண் மனசு ஆழம் என்று, சோலைப்பசுங்கிளியெ ஆகிய பாடல்களை இளையராஜா எழுதி பாடினார். இப்படத்தில் தான் நடிகர் வடிவேலு அறிமுகமானார்.
தவமாய் தவமிருந்து
2005ல் சேரன் இயக்கத்தில் வெளியான படம். சேரன், பத்மபிரியா, ராஜ்கிரண், சரண்யா, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். சபேஷ் முரளி இசை அமைத்தார். ஒரே ஒரு ஊருக்குள்ளே, என்னை சரணடைந்தேன், ஒரு முறைதான், என்ன பார்க்கிறாய். ஆக்காட்டி, ஆவாரம் பூவே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தந்தை - மகன் உறவையும், குடும்ப உறவுகளின் சிறப்பையும்; 'நச்'; சென்று பொட்டில் அறைந்தாற்போல் எடுத்துக் கூறிய படம்.
இந்தப்படத்திற்காக சிறந்த துணை நடிகராக நடித்த ராஜ்கிரணுக்கு பிலிம்பேர்; விருது கிடைத்தது.
சண்டக்கோழி
2005ல் என்.லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான மசாலாப்படம் சண்டக்கோழி. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால், சுமன் ஷெட்டி, கருப்புசாமி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். படம் விறுவிறுப்பாகச் செல்லும். கேட்டா கொடுக்கிற பூமி, தாவணி போட்ட, என்னமோ நடக்கிறது, கும்தலக்கடி கானா, முண்டாசு சூரியனே ஆகிய பாடல்கள் உள்ளன.
ரஜினி முருகன்
2016ல் பொன் ராம் இயக்கத்தில் என்.சுபாஷ், சந்திரபோஸ், லிங்குசாமி தயாரிக்க டி.இமான் இசையில் வெளியான படம் ரஜினி முருகன். சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பட்டையைக் கிளப்பி இளைஞர்கள் கூட்டத்தை திரையரங்கிற்குள் சுண்டி இழுத்தது.
ராஜ்கிரண் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக நடித்து செம ரகளை பண்ணியிருப்பார். பாடல்கள் பட்டாசாய் வெடிக்கும் ரகங்கள். ரஜினி முருகன், உன் மேல ஒரு கண்ணு, ஆவி பறக்கும் டீக்கடை, என்னம்மா இப்படி பண்றீங்களம்மா, ஜிகிரு ஜிகிரு ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இன்று பிறந்தநாள் காணும் ராஜ்கிரணுக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள்.