இயக்குனர் சொல்லியும் கேட்காத கமல்ஹாசன்!... கடைசியில் சர்ஜரி வரை சென்று திரும்பிய அதிர்ச்சி பின்னணி…
கமல் - எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் உருவான சகலகலா வல்லவன் படம் ஏவிஎம் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம். அந்தப் படத்தின் இளமை இதோ இதோ பாடல் எல்லா புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் தவறாமல் இடம்பெறும் பாடல். அந்தப் பாடல் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
இளையராஜா இசையில் இளமை இதோ இதோ பாடல் தொடக்கத்தில் உருவான போது 'ஹேப்பி நியூ இயர்’ என்கிற வார்த்தை இல்லையாம். ஆனால், அந்தப் பாட்டு புத்தாண்டு பற்றியது என்றவுடன் இந்த வார்த்தைகளைச் சேர்க்கலாம் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான் சொல்லியிருக்கிறார்.
அதன்பின்னரே ஹைபிட்சில் அந்த வார்த்தைகள் இளமை இதோ இதோ பாடலில் இடம்பெற்றன. அதுபோக அந்தப் பாடல் ஷூட் செய்யப்பட்ட செட்டும் அந்தப் படத்துக்காகப் போடப்பட்டது அல்ல. கன்னடப் படம் ஒன்றுக்காக ராஜ தர்பாராக போடப்பட்டிருந்த செட்டில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து பெரிய ஐந்து நட்சத்திர விடுதி போன்ற தோற்றத்தை கலை இயக்குநர் சாலம் கொண்டுவந்தார்.
பல நிறங்களில் ஒளிரும் வண்ண வண்ண விளக்குகள் எல்லாம் இதற்காகவே பிரத்யேகமாக ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை. மேலும், அந்தப் பாடலில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வரும் காட்சியில் கமலுக்குப் பதில் டூப் வைத்து எடுக்கவே நினைத்தாராம் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். ஆனால், நானே நடிக்கிறேன் என்று கமல் சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் உள்பட படக்குழுவினர் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல், டூப் போடாமல் கமலே கண்ணாடியை உடைத்திருக்கிறார். ஷாட் முடிந்ததும் கமலுக்கு முகத்தில் கண்ணாடி கிழித்து காயம் ஏற்பட்டிருக்கிறது. இதைக் காட்டினால் இயக்குநரிடம் திட்டு வாங்க வேண்டி வரும் என்று சொல்லி, அவராகவே மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். அதன்பின், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தழும்பு இல்லாமல் குணப்படுத்தினார்களாம்.