அன்று கேப்டன். இன்று விஜயா? டப்பா டான்ஸ் ஆடிவிடும்.. வடிவேலுவை தாக்கிய ப்ளூசட்டை மாறன்
மீண்டும் திமுகவிற்காக பேச ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. நிச்சயமாக முதல்வர் ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர் என நேற்று மேடையில் பேசினார். ஏற்கனவே விஜயகாந்துக்கு எதிராக திமுகவிற்கு ஆதரவாக பேசி கடைசியில் அவர் நிலைமை என்ன ஆனது என அனைவருக்குமே தெரியும். சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த நிலையில் வடிவேலுவின் இந்த பேச்சால் ப்ளூசட்டை மாறன் அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் வடிவேலுவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதோ அவர் கூறியது.
இவர் காமடியாக பேசினால் வாக்குகள் விழும் என நம்பியது திமுக. ஆனால் அப்போது தோல்வியை தழுவியது. சின்னக் கவுண்டர் படத்தில் அரை டஜன் ஆடைகள் மற்றும் பணம் தந்து உதவியவர் கேப்டன். பிறகு பல படங்களில் தன்னுடன் நடிக்க வைத்து வளர்த்து விட்டார் விஜயகாந்த். வீட்டருகே நடந்த சாதாரண பார்க்கிங் பிரச்னையை மனதில் வைத்துக் கொண்டு விஜயகாந்தை குடிகாரர் என மட்டம் தட்டி திமுக மேடையில் விஜயகாந்தை பற்றி தரக்குறைவாகபேசினார் வடிவேலு.
திமுகவின் பிரதான எதிரி ஜெயலலிதாவை விமர்சித்தால் டங்குவார் கிழிந்துவிடும் என்பதால் தனது பர்சனல் பகையை தீர்க்க கேப்டனை மட்டும் வசைபாடினார். ஆனால் இவரை கண்டுகொள்ளாமல் லூஸில் விட்டார் விஜயகாந்த். வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என சொன்னவர் விஜயகாந்த். ஜெயலலிதா முதல்வரான பிறகு அரசியலில் காணாமல் போனார். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அக்கட்சிக்காக பேசமாட்டார். ஆளுங்கட்சியாக இருந்தால் தேர்தல் நேரத்தில் மட்டும் சுய ஆதாயத்திற்காக திமுக மேடைகளில் தலையை காட்டுவார்.
தன்னை ஒருமையில் பேசி கிண்டல் செய்ததால் 'ராஜா' எனும் படத்தோடு இவரை நிரந்தரமாக புறக்கணித்து விட்டார் அஜித். அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெற விரும்பும் திமுக வடிவேலுவை மேடையேற்றுவது முரண். அன்று ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. இன்று மோடியையும் எதிர்க்க மாட்டார். திமுகவை அரசியல் எதிரி எனக்கூறும் விஜய்யை எதிர்த்தால் இவரது டப்பா டான்ஸ் ஆடிவிடும். ஆகவே அரண்மனை புலவர் போல முதல்வரை பாராட்டி பேசி பொற்கிழி வாங்குவதோடு சரி.
சினிமாவில் இவரது காமடி எடுபடாமல் போய் பல வருடங்களாகி விட்டது. பிரச்சாரத்தில் எப்படி எடுபடும்? தன்னுடன் பல வருடங்கள் இணைந்து நடித்த துணை நடிகர்கள் பலரின் கஷ்டத்திலும் உதவாத, அவர்களின் இறப்பிற்கும் செல்லாத இவரால் மக்களுக்கு என்ன பயன்? மாமன்னன் படத்தில் நடித்ததோடு இவரது சகவாசத்தை உதயநிதி நிறுத்தியிருக்க வேண்டும். திமுக எனும் கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை விட்ட கதைதான் இது. இவரது வாய் ராசியால் மீண்டும் திமுக தோற்றால் அதற்கு திமுகவே பொறுப்பு என கூறியிருக்கிறார் ப்ளூசட்டை மாறன்.