17 படங்களில் வில்லனாக நடித்த சிவாஜி... அவரே மாதிரி யாருமே நடிக்கலப்பா... ஆதங்கப்படும் இயக்குனர்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த வசந்தமாளிகை பட ரீரிலீஸ் விழாவில் நடிகர் திலகம் பற்றி பிரபல இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
சங்கராபரணம் மாதிரி பல ஜீவன் உள்ள படங்களைக் கொடுத்தவர் சிவாஜி கணேசன். முதல் படம் பராசக்தி. 25வது படம் கள்வனின் காதலி. 50வது படம் சாரங்கதாரா. 75வது படம் பார்த்தால் பசி தீரும். 100வது படம் நவராத்திரி.
125வது படம் உயர்ந்த மனிதன். 150வது படம் சவாலே சமாளி. 175வது படம் அவன்தான் மனிதன். 200வது படம் திரிசூலம். அந்த மாதிரி சிவாஜிகணேசனை அணுஅணுவா ரசிச்சது. அது எத்தனை படத்துலன்னு தெரியாது. நடக்கறதுக்கும், வசனம் பேசுனதுக்கும் கைதட்டல் வாங்கின ஒரே நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான்.
எப்படி நடந்தாலும் கைதட்டல் வாங்கினார். வசனம் பேசி கைதட்டு வாங்கறதை எல்லாம் பார்க்க முடியாது. அவர் சினிமா இருக்குற வரைக்கும் இருக்குறவரு. அதனால அவர் இங்கே பிறந்ததுதான் நமக்கெல்லாம் பெருமை.
நானும் ரஜினி மாதிரி பல நடிகர்களை வச்சிப் படம் பண்ணிட்டேன். யாராவது நாம நினைக்கிற மாதிரி நடிப்பாங்களான்னா இல்ல. என்னால பார்க்க முடியல. ஏன்னா எல்லா நடிப்பையும் நான் சிவாஜி மூலமா பார்த்துட்டேன்.
அதுக்கு மேல என்னால பார்க்க முடியாது. அப்படி பார்த்தேன்னு சொன்னா அது பொய். என் ஆசை மச்சான்னு ஒரு படம் எடுத்தேன். பேசாதேன்னு சொல்வார். ரேவதி பேசுனா. இனி இந்த விஷயத்துல மூச்சே விடக்கூடாதுன்னு சொன்னா செத்துட்டா. அது கதையா அமைஞ்சதுக்குக் காரணம் வசந்தமாளிகை.
'நீ அப்படிக் கேட்டுருக்கக்கூடாது'ங்கறதை ஜீவனா எடுத்து அதைப் படமா எடுத்து சிவாஜிகணேசன் நடிச்சிருக்காரு. அதெல்லாம் விடுங்க. அவர் எப்படி கொடுத்தாலும் நடிப்பாரு. அது வில்லனா இருந்தாலும் சரி. மோட்டார் சுந்தரம்பிள்ளைன்னு ஒரு படம். அதுல ஜெயலலிதாவுக்கு அப்பாவா நடிச்சிட்டு சுமதி என் சுந்தரியில 'பொட்டு வைத்த முகமோ'ன்னு பாடுறாரு.
அப்படி வந்து ஒரு அப்பாவா நடிச்சிட்டு அந்தப் பொண்ணோடவே ஹீரோவா நடிக்கிறாரு. அந்த வகையில டைரக்டருக்கு, தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல. நடிகருக்கே தைரியம் இருக்குன்னா அது சிவாஜிக்கு மட்டும்தான்.
17 படங்கள்ல வில்லனா நடிச்சிருக்காரு. பெண்ணின் பெருமை, அந்த நாள், நானே ராஜா, கள்வனின் காதலி இப்படி லைனா சொல்லிக்கிட்டே போகலாம். அப்பா கேரக்டர்லயே பல முகங்களைக் காட்டிருக்காரு. அப்படி அப்பாவா, வில்லனா, நாயகனா நடிப்புன்னு நடிச்ச ஒரே நடிகர் சிவாஜி தான். அவருக்கிட்ட மட்டும்தான் அந்த நடிப்பு இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.