2024-ல் சிறுபட்ஜெட்டில் எடுத்து.. தமிழ் சினிமாவயே ஆச்சரியப்படுத்திய படங்கள்!..
2024 ஆண்டு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி கொடுத்து தமிழ் சினிமாவிலேயே அசர வைத்த படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ் சினிமாவில் இந்த வருடம் பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியும் அடைந்திருக்கின்றது, தோல்வியும் அடைந்திருக்கின்றது.
அதுவே வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் அதிலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் பல சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த வருடத்தில் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய நிலையில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பல பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட படங்களின் தொகுப்பை தான் நாம் பார்க்க போகிறோம்.
லவ்வர்: ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மணிகண்டன் நடிப்பில், பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் லவ்வர். இந்த திரைப்படம் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் சுமார் 40 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. டாக்ஸிக் காதலை மையப்படுத்தி படத்தின் கதையை மிகச் சிறப்பாக இயக்கியிருந்தார் இயக்குனர்.
மகாராஜா: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் இந்த வருடம் ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியானது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நாடு முழுவதும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது சீனாவிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
கொட்டுக்காளி: கூழாங்கல் என்கின்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னாபென் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் கொட்டுக்காளி. கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்தும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. சர்வதேச அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை அள்ளியது. படம் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்திருந்தாலும் விமர்சன ரீதியாக ஒரு வெற்றி படமாக இருந்தது.
லப்பர் பந்து: இந்த வருடத்தில் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் லப்பர் பந்து. இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வஸ்திகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் லப்பர் பந்து. இந்த திரைப்படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 45 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
வாழை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் வாழை. நடிகர்கள் கலையரசன், திவ்யா, நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சில சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 60 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்தது.
ஜமா: கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலையும் அவர்களுக்கு நடக்கும் அரசியல் எதார்த்தத்தையும் காட்டிய திரைப்படம் ஜமா. இயக்குனராகவும் நடிகராகவும் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கின்றார் பாரி இளவழகன். வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ஒரு நல்ல திரைப்படமாக பார்க்கப்பட்டது ஜமா திரைப்படம்.