சும்மா சரவெடிதான்!. பிரபுதேவா - வடிவேலு இணையும் புதிய படம்!.. செம அப்டேட்!...

By :  MURUGAN
Published On 2025-07-15 12:52 IST   |   Updated On 2025-07-15 12:52:00 IST

Vadivelu: 90 கிட்ஸ்களுக்கு மிகவும் ரசித்த கூட்டணி எனில் அது பிரபுதேவா - வடிவேலு கூட்டணிதான். இரண்டுமே ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். ஜென்டில்மேனில் ‘சிக்கு புக்கு’ பாடலுக்கு ஆடிய பிரபுதேவாவை ஹீரோவாக போட்டு காதலன் படமெடுத்தார் ஷங்கர். அந்த படத்தில் பிரபுதேவாவின் நண்பராக வடிவேலு நடித்தார். வடிவேலு நடித்த முதல் சிட்டி படம் இதுதான். அதற்கு முன் கிராமப்புற கதைகளில் மட்டுமே நடித்து வந்தார்.

காதலன் படத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து வடிவேலு அடித்த லூட்டி ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தது. இந்த படத்தில் பெரும்பாலான பாடல் காட்சிகளில் வடிவேலும் இருப்பார். இந்த கூட்டணி வரவேற்பை பெறவே பிரபுதேவா நடித்த எல்லா படங்களிலும் வடிவேலு நடித்தார். லவ் பேர்ட்ஸ், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடிவிட்டாய், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர்.


இதில் மனதை திருடிவிட்டாய் படத்தில் படம் முழுக்க பட்டர் இங்கிலீஸ் பேசி நடித்திருப்பார் வடிவேலு. அதிலும் ‘ஒய் பிளட். சேம் பிளட்’ போன்ற வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. அதன்பின் பிரபுதேவா இயக்கிய போக்கிரி, வில்லு போன்ற படங்களிலும் வடிவேலு நடித்தார்.

ஆனால், கடந்த பல வருடங்களாகவே இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், மனதை திருடிவிட்டாய் படத்தில் வடிவேலு பாடும் ‘Sing in the rain' பாடலை பிரபுதேவாவிடம் வடிவேலு பாடிக்காட்டும் வீடியோவை பிரபுதேவா 2 வருடங்களுக்கு முன்பு வெளியிட்டார்.


இந்நிலையில், இப்போது பிரபுதேவாவையும், வடிவேலுவையும் ஒரு புதிய படத்தில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. துபாய் தொழிலதிபர் கண்னன் ரவி தயாரிக்கும் இந்த படத்தை டார்லிங், 100 போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகவும் என சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News