அபூர்வ ராகம் To கூலி!.. சினிமாவில் 50 வருடங்கள்!. ரஜினி கடந்து வந்த பாதை!...
Rajinikanth: பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்த ரஜினிக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்ட நண்பரின் உதவியோடு சென்னை வந்து திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தார். அவர் மதிக்கும் பாலச்சந்தரே ஒருநாள் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வர ரஜினிக்கு அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி ஏதோ ஒரு வகையில் பாலச்சந்தரை கவர அவர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் தொடர்ந்து பாலச்சந்தரின் இயக்கத்தில் நடித்தார். எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். பெரும்பாலும் கமலுக்கு நண்பராகவும், வில்லனாகவும் நடிப்பார். வில்லன் நடிப்பை தனது ஸ்டைலில் செய்து அசத்தினார் ரஜினி. ஒரு கட்டத்தில் கமலும், ரஜினியும் பேசி முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க துவங்கினார்கள். பைரவி படம் மூலம் ஹீரோவாக மாறினார் ரஜினி.
துவக்கம் முதலே ஆக்ஷன் படங்களில் நடித்தார். வசனம் பேசும் ஸ்டைல், உடல் மொழி, சிகரெட் பற்ற வைக்கும் ஸ்டைல் என எந்த நடிகரிடமும் பார்க்காத ஒன்றை ரஜினியிடம் பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்தார்கள். தொடர் ஹிட் படங்களை கொடுத்து சூப்பர்ஸ்டாராக மாறினார். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களிலும் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க மாஸ் ஹீரோவாக மாறினார்.
‘எல்லாமே மாஸ்தானா?.. நல்ல கதைகளை கொண்ட சீரியஸான படங்களில் நடிக்கலாமே’ என ஒருமுறை கமல் கேட்டதற்கு ‘அதையெல்லாம் நீங்க செய்ங்க’ என சொன்னார் ரஜினி. தன்னுடைய ரூட் இதுதான் என்பதில் ரஜினி தெளிவாக இருந்தார். இப்போது வரை அந்த ரூட்டில்தான் பயணிக்கிறார். விஜய் போல பல நடிகர்கள் வந்தாலும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இப்போதும் அவரிடம்தான் இருக்கிறது. ஜெயிலர் படம் மூலம் 650 கோடி வசூலை கொடுத்து விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுக்கிறார்.
இடையில் சில படங்கள் சறுக்கினாலும் அதில் துவண்டு போகாமல் தொடர்ந்து நடித்து ஹிட் கொடுக்கிறார். பாபா படம் சறுக்கிய போது மேடையில் பேசிய ரஜினி ‘விழுந்தா எழாமல் இருக்க நான் யானை இல்ல. குதிரை’ என்றார். சொன்னபடியே அடுத்து சந்திரமுகி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதுதான் ரஜினி. ரஜினியின் அடையாளமே வெற்றிதான். 72 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.
இந்திய சினிமா உலகில் 74 வயதில் ஹீரோவாக அடித்து ஹிட் கொடுக்கும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தை முடித்துவிட்டு இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இன்னமும் நடிப்பார். அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கிறது. எதையும் அவர் தலையில் ஏற்றுக்கொள்வதில்லை. விமர்சனங்களுக்கெல்லாம் வெற்றி மூலமே அவர் பதில் சொல்கிறார்.
ரஜினிகாந்த் எனும் நடிகர் தமிழ் சினிமாவிலும், ரசிகர்களிடமும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு அடங்கிப்போக இன்னும் பல வருடங்கள் ஆகும். அதுதான் ரஜினியின் வெற்றி. அவரின் அபூர்வ ராகம் படம் 1975ம் வருடம் ஆகஸ்டு 15ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 50 வருடங்கள் முடியும் நாளில் கூலி வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகிறது. 50 வருடங்கள் சினிமாவில் ரஜினி தனது தடத்தை ஆழமாக பதித்திருக்கிறார். ரஜினி போல இன்னொரு நடிகர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பது நிதர்சனம்.